அச்சிடுதல் செய்முறைகளின் மூலம் பெறப்படுகின்ற சித்திரங்கள் அல்லது படங்களின் மீள் உருவாக்கம். தாள், துணி அல்லது வேறு பொருள்களின் பரப்பில் எழுத்து, படம் அல்லது ஓவியங்களைப் பதித்து உருவாக்கப்படும் பதிவுகள். மேலை நாட்டில் அச்சடித்தல் 15ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தொடங்கியது. இது அடுக்கிக் கோக்கக் கூடிய உலோக அச்சு எழுத்துக்களின் கண்டுபிடிப்புடன் தொடங்கியதாகும். அச்சடித்த எல்லா நூல்களையும்விட மிகவும் பெயர்பெற்ற நூலாகக் கருதப்படுவது கூட்டன்பேர்க் வௌியிட்ட விவிலிய நூலாகும். எனவே அச்சடித்தலின் கண்டுபிடிப்புப் பற்றிய செய்திகள் பெரும்பாலும் கூட்டன்பேர்கை இணைத்தே பேசப்படுகின்றன. டச்சு நாடு அச்சடிப்பின் கண்டுபிடிப்பினை லோரன்சு, ஜான்மூன் காஸ்டர் என்ற ஹார்லம் நகரத்தைச் சேர்ந்த அறிஞருடன் இணைத்துக் கூறுகிறது. ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் உள்ள அரும்பொருட் காட்சியகங்களில் தொட்டில்முறை அச்சடிப்பாலான அச்சுச் சிதிலங்கள் காக்கப்பட்டு வருகின்றன. கூட்டன்பேர்க் பயன்படுத்திய கோக்கும் அச்செழுத்துக்களைக் கொண்டு முதன்முறையாக தனித்தனி எழுத்துக்களால் சொற்களையும், சொற்கள் மூலம் வரிகளையும், வரிகளைக்கொண்டு பக்கங்களையும் மை தடவி அச்சடித்து, பின்னர் மையைக் கழுவிவிட்டு எல்லாப்பக்கங்களிலும் உள்ள வரிகளில் அடங்கிய சொற்களில் உள்ள எழுத்துக்களை மறுபடியும் தனி எழுத்துக்களாகப் பிரிக்கமுடிந்தது. தனி அச்சு எழுத்துக்களைக் கண்டுபிடிக்க முன் மேலைநாட்டில் அச்சுக்கட்டையால் அச்சடிக்கும் முறை மட்டுமே நிலவியது. கூட்டன்பர்கும் காஸ்டரும் இம்முறையைக் கண்டுபிடிக்கும் முன்பு ஒவ்வொரு புதிய படியையும் கையால் எழுதி உருவாக்கவேண்டி இருந்தது. தூவிகள், இறகுகள் கொண்டு ஆட்டுத்தோலில் எழுத்துக்கள் எழுதப்பட்டன. பிறகு இவற்றில் வேண்டிய கையெழுத்துக்கள், படங்கள் மற்றும் வரைவுகள் பொன் இலைகள் கொண்டு பல வண்ணங்களில் வரையப்பட்டன.
அச்சிடுதற் செய்முறைகள்.