மரம் அல்லது செப்பு, ஈயம், தகரம், துத்தநாகம், நிக்கல் போன்ற உலோகங்களில் செய்யப்பட்ட அச்சிடுதல் புடைப்பித்தல், பொறித்தல் போன்ற செய்முறைகள் மூலம் உருவமைப்புக்களை உருவாக்குவதற்கு பயன்படுத்தப்படுகின்ற தட்டையான அச்சுரு. பொதுவாக அச்சிடும் தகடுகள், மரக்கட்டை, துத்தநாகம், அலுமினியம், செம்பு, ஈயக்கலவை, ரப்பர், குழைமம் (plastic) ஆகியவற்றால் செய்யப்படுகின்றன. இந்த தகடுகளை எந்திரத்தின் உருளையில் பொருத்திப் பின் அதன்மேல் மைதடவித் தாள், துணி, அட்டை, குழைமம், உலோகம், மற்றும் பிற பொருள்களில் அச்சடிக்கலாம். பழங்காலத்தில் பவேரியா நாட்டில் கல் அச்சடிக்கும் தட்டாக உதவியது. இதிலிருந்தே கல்லச்சு முறை (Lithography) தோன்றிற்று. நுண்துளைகள் நிறைந்த, எண்ணெய்ப் பொருளைத் தேக்கி வைத்துக் கொள்ளக் கூடிய தண்ணீரை உறிஞ்சவல்ல கற்கள் அச்சிடப் பயன்பட்டன. இத்தகடுகளில் அச்சிடும் பகுதியில் மைதடவப்படும். பின்பு அழுத்தம் கொடுக்கப்படும். மற்ற பகுதிகளுக்கு மையோ, அழுத்தமோ வழங்கப்படுவதில்லை. மைக்குப் பதில் குழைவணம் (ியவைெ) பயன்படுவதும் உண்டு. அச்சுத்தகடுகள் அல்லது தட்டுக்களை உருவாக்க கீழே தரப்பட்டுள்ள பல முறைகளும் பல பொருள்களும் பயன்படுகின்றன. உருவாக்க வேண்டிய படிமத்தினையும் அப்படிமம் தேவைப்படும் எண்ணிக்கையையும் பொறுத்து முறையும் பொருளும் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.
முப்பருமானத் தகடுகள் (Stereo plates) எழுத்தை அழுத்தி அச்சிடும் முறையைச் சார்ந்தவை. இதில் உயரமாக உள்ள பகுதிகள் மையும் அழுத்தமும் பெறுகின்றன. உயரம் குறைவான பகுதிகள் அச்சிடப்படுவதில்லை. இது கட்டை அல்லது ஈயம், வௌ்ளீயம், ஆன்டிமனி ஆகிய மூன்று உலோகங்களின் கலவையால் வார்க்கப்பட்டுச் செய்யப்படும். இம் முப்பருமானத் தகடுகள் தட்டையாகவோ, குழிவாகவோ எந்திரத்திற்கேற்றவாறு தயாரிக்கப்படுகின்றன. இவ்வகையில் கட்டையால் செய்யப்படுவதை மரக்கட்டைப் பொறிப்பு (Wood engraving) என்றும், எஃகு, செம்பு, அல்லது உலோகக் கலவையால் செய்யப்படுபவை அந்தந்தப் பொருளின் பெயராலும் வழங்கும். கோட்டுப்படக் கட்டை (Line Block) கையால் இந்திய மை கொண்டு வரைந்த படத்தின் நிழற்பட எதிர்நகலைத் (negative) தயாரித்து அதைத் துத்தநாகத் தகட்டின் மேல் வைத்து ஔிபாய்ச்சி அமிலத்தினால் தேவையற்ற இடங்களைப் பள்ளமாக அரித்து இத்தகைய கோட்டுப்பட அச்சிடும் தகடு தயாரிக்கப்படுகின்றது. அரைவரிநீழல் படக்கட்டை (Halftone Block) நிழற்படங்கள், ஔி, நிழல் மாறுபாடுகள் நிறைந்த வண்ணக்கலவை ஓவியங்கள் ஆகியவற்றிலிருந்து நிழற்பட எதிர் நகல் தயாரித்து அதைத் துத்த நாக அல்லது செம்புத் தகடுகள் மேல் வைத்து ஔி பாய்ச்சி, அமிலத்தினால் தேவையற்ற பகுதிகளை ஆழமாக அரித்து அரைவரி நீழல் படக்கட்டைகளைத் தயார் செய்கிறார்கள். ரப்பர் தகடுகள்: இயற்கை அல்லது செயற்கை ரப்பர் அச்சிடும் தட்டாகத் தயாரிக்கப்படுகின்றது. குழைம மூசைக்கு முதலில் வெப்பமும் அழுத்தமும் கொடுக்கப்படுகின்றன. பிறகு ரப்பர் அதன் மேல் வைக்கப்பட்டு அச்சுத்தகடு தயாரிக்கப்படுகின்றது. இது நௌிவரை (flexography) அச்சிடும் முறையைச் சார்ந்ததாகும். குழைமம் அச்சிடும் தகடுகள்: நிழற்பட எதிர் நகல் மூலம் ஔிபாய்ச்சி வேதியியல் முறையில் தேவையற்ற பகுதிகள் அரிக்கப்பட்டு குழைமத் தகடுகள் தயாரிக்கப்படுகின்றன. கல்லச்சு, மறுதோன்றி அச்சுத்தகடுகள்.: நிழற்பட எதிர்ப் படலம், இயற்படலம் ஆகியவற்றின் மூலம் ஔி பாய்ச்சும் போது துத்தநாக அல்லது அலுமினியத் தகடுகளுக்கு அச்சிடும் பகுதி வேதியியல் முறையில் மாற்றப்படுகின்றது. இது சமதள அச்சுமுறையைச் (planography) சார்ந்தது. எழுத்துப் பதிப்பு முறையைப் போல இதில் மேடு பள்ளப்பகுதிகள் இல்லை. இது சமபரப்பாக அமைந்திருக்கும். (அறிவியல் களஞ்சியம் 2005).
அச்சிடுதல் உபகரணங்கள்