முனைவர் உலோ.செந்தமிழ்க்கோதை ஆற்றல் மிக்க அறிவியல் எழுத்தாளர். அறிவியல் மக்களைச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கம் உடையவர். அவர் எழுதிய 20 கட்டுரைகள் இந்நூலில் தரப்பட்டுள்ளன. மாசில்லா மின்னாக்கம், வானிலை முன் கணிப்பு, விண்வெளி மின் நிலையங்கள், புற்று நோயற்ற மீநுண் தொழில்நுட்ப முறை முதலியவை அவருடைய நோக்கத்தை நேர்முகமாக அறிவிக்கும் கட்டுரைகளாக உள்ளன. இருபதாம் நூற்றாண்டு அறிவியல் தொழில் நுட்பப் புரட்சிகள் என்ற கட்டுரை நீண்ட வரலாற்றின் சுருக்கமாக அமைந்துள்ளது. 1895 ஆம் ஆண்டு முதல் 1997 ஆம் ஆண்டு வரை அறிவியல்தாய் தந்த கண்டுபிடிப்புக் குழந்தைகளின் அருமையான பட்டியல் உள்ளத்தில் வியப்பொலி ஏற்றி வைக்கிறது. அறுகோண வடிவச் சிறிய தேன்கூட்டின் சிறப்பையும், ஆசிரியர் சாற்றுகிறார். உயிரின வளர்ச்சி வரம்புகள் என்ற கட்டுரை படிப்பவரை தொல்பழங்காலத்திற்கு அழைத்துச் செல்கிறது. நிலவைச் சுற்றி வருவதற்கான செயல் திட்டம் பற்றிய கட்டுரை படிப்பவரை எதிர்காலத்திற்கு இழுத்துச் செல்கிறது. பக்கம் 78-80, 135-136 ஆகியவற்றிலுள்ள கலைச்சொற்கள் ஆசிரியரின் கலைச் சொல்லாக்கத் திறமைக்குச் சான்று கூறுகின்றன. இந்நூல் அறிவியல் துறையில் புதிய வரவு. அறிவியல் உணர்வின் இதய உறவு.
- ஏப்ரல் 2008 -