உலோகநாதன்-படவேட்டம்மாள் தம்பதியினருக்கு 1945.12.22 அன்று, திருத்தணி வட்டம் புச்சிரெட்டி பள்ளி என்ற சிற்றூரில் பிறந்தவர். ஆரம்ப கல்வியை உள்ளூரிலும், உயர்கல்வியை சென்னையிலும், கோவையிலும் பெற்று, பின்னர் 32 1/2 ஆண்டுகள் தமிழ்நாடு மின்வாரியத்தில் பணியாற்றி 2002 இல் ஓய்வு பெற்றுள்ளார். பணி ஓய்வின் பின், அமெரிக்க வாஷிங்டன் டி.சி தற்காலவியல் ஆய்வுப் பல்கலைக்கழகத்தில் மின் திறனமைப்புப்பொறியியலில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். பள்ளிக் காலத்திலிருந்தே அறிவியல் தமிழெழுத முனைந்ததால் தொடர்ந்து அறிவியல் தமிழாக்கத்திலேயே முழுக்கவனம் செலுத்தியவர். 1960 களில் பள்ளியில் படிக்கும் காலத்திலேயே இவர் எழுதிய ''வானொலி'', ''காங்கோவின் கதை'' ஆகிய சிறு நூல்கள் பலரின் பாராட்டையும் பெற்றவை. கிண்டி பொறியியல் கல்லூரியில் பயின்றபோது மாணவர்களை அறிவியல் தமிழெழுத ஒன்றிணைத்து கட்டுரைகளைப் பதிப்பித்து ஆண்டு மலர்களில் வெளியிட்டுள்ளார். நண்பர்களுடன் சேர்ந்து அறிவியல் கலைச்சொல்லாக்கம் தொடர்பில் பல முயற்சிகளில் ஈடுபட்டு, பல பரிசில்களையும் பெற்றுள்ளார். பொறியியில் கல்லூரியில் பயிலும்போது தொடர்ந்து அறிவியல் தமிழ் வளர்ச்சியில் ஈடுபட்டார். கலைக்கதிர் மாணவர் இதழ் ஒன்றையும், 'அறிவுக்கதிர்'' கட்டுரைகளையும் பதிப்பித்துள்ளார். மின்வாரியத்தில் பணியாற்றும்போது ''தமிழ் அரசு'' ஆற்றல் சிறப்பிதழைப் பதிப்பித்துள்ளார். பொறியாளர் 20 பேரை ஒன்றிணைத்து மின்வாரியத் தமிழ்நாடு தொழில்நுட்ப அகராதி உருவாக்கிடப் பெரும்பணி புரிந்துள்ளார். 4 ஆண்டுகள் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அறிவியல் களஞ்சிய மையத்தில் பணிபுரிந்துள்ளார். அண்ணா பல்கலைக்கழகம், தமிழ்ப்பல்கலைக்கழகங்களில் கலைச்சொற்குழுக்களில் பங்கேற்றுள்ளார். அண்ணா பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள சுற்றுச் ஊழல் களஞ்சிய ஆக்கத்திலும் பதிப்புப் பணியில் பெரும் பங்காற்றியுள்ளார். இருநூறுக்கும் மேற்பட்ட கட்டுரைகளும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட அறிவியல், சுற்றுச்சூழல் களஞ்சியக் குறிப்புகளும் சிறு தலைப்புகளும் எழுதியுள்ளார். அறிவியல் இதழ்களான களஞ்சியம், அறிக அறிவியல், அறிவியல் பூங்கா, அறிவியல் ஒளி, உங்கள் நூலகம், சமூக விஞ்ஞானம், ஜனசக்தி போன்றவற்றில் அறிவியல் கட்டுரைகளோடு அறிவியலின் மெய்யில், அறிவியலின் சமூகவியல், அறிவியல் கோட்பாடு ஆக்கங்களை படைத்து வருகிறார்.
உலோ.செந்தமிழ்க் கோதை