முதுபெரும் பத்திரிகையாளரான சோலை ஈழப்பிரச்சனை குறித்து பல்வேறு பத்திரிகைகளில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது.
ஈழத் தமிழர்கள் யார்? என்ற தலைப்பில் அவர் எழுதியுள்ள தொடக்கக் கட்டுரை அவருடைய ஆய்வுத் திறனை வெளிப்படுத்துகிறது. ஆனால் லெமூரியா கண்டம் குறித்து அவர் குறிப்பிட்டுள்ள விஷயங்கள் காலாவதியானவை. அதைப்போன்றே இலங்கையில் தமிழர்கள் பூர்வீகக் குடிகள் என அவர் நிறுவ முயற்சிப்பதும் கேள்விக்குரிய விஷயமாகிவிட்டது.
இந்திய துணைக்கண்டம் உருவான விதத்தை பூகோளவியல் வரலாறு வேறு விதமாக கூறுகிறது. இலங்கையும் இந்தியாவும் இணைந்திருந்து பிரிந்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்பதை தமிழர்களுக்கு விளக்க வேண்டிய அவசியம் எழுந்திருப்பதாகவே தோன்றுகிறது.
அதேசயம் தமிழர்கள் கடல் கடந்து வணிகம் செய்திருக்கிறார்கள். நாடுகளை ஆக்கிரமித்திருக்கிறார்கள், அதற்குரிய வல்லமையைப் பெற்றிருக்கிறார்கள் என்பதற்கு ஏராளமான சரித்திரச் சான்றுகள் இருக்கின்றன.
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் தமிழர்கள் குடியேறியுள்ளார்கள். மொரிசியஸ் தீவில் உள்ள தமிழர்கள் தங்கள் அடையாளத்தையே இழந்துவிட்டார்கள் என்பது நாம் சமீபத்தில் அறிந்த உண்மை. அதே சமயம் இலங்கையில் தமிழர்கள் உரிமைக்காக போராடுகிறார்கள். தமிழர்கள் வாழும் பகுதியில் அவர்களை சிறுபான்மையினராக மாற்றும் முயற்சியை எதிர்த் உ அவர்கள் போராடுகிறார்கள். அந்த அடிப்படையில்தான் அவர்கள் நடத்தும் போராட்டத்தை நாம் பார்க்கவேண்டும். உலகின் எந்த மூலையிலும் உரிமைக்காக போராடும் மக்களின் போராட்டத்தை இந்தியா ஆதரித்து வந்திருக்கிறது. அதேசமயம் ஒரு நாட்டின் இறையாண்மைக்கு பாதகம் இல்லாமல் தீர்வுகாண முயற்சி மேற்கொள்வதில் கவனமாக இருந்திருக்கிறது.
இல்கையில் விடுதலைப் புலிகளின் போராட்டத்தை உலக நாடுகள் எப்படிப் பார்க்கின்றன. தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் எப்படிப் பார்க்கின்றன. இலங்கையில் அடுத்தடுத்து ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்தபோதும் ரணில் விக்கிரமசிங்கே தவிர மற்ற அதிபர்கள் அனைவரும் ஈழப்பிரச்சனைக்குத் தீர்வு காண்பதை எதிர்த்தே வருகிறார்கள் என்பதை சோலை தனது கட்டுரைகளில் தெளிவுபடுத்தியிருக்கிறார்.
இலங்கையில் 2002 ம் ஆண்டு நார்வே அமைதிக்குழுவுன் முயற்சியால் இருதரப்பினரும் சண்டை நிறுத்தம் அறிவித்தார்கள். அதற்கு முன் இரு தரப்பினரும் ஆறு சுற்றுப் பேச்சு நடத்தினார்கள் என்பதை சோலை தனது கட்டுயில் குறிப்பிடத் தவறிவிட்டார்.
ஆனால் ராஜபக்சே அரசு தமிழர் பகுதிகள் மீது நடத்திவரும் தாக்குதல்கள், சண்டை நிறுத்த உடன்பாட்டை எந்த வகையில் மீறியுள்ளன. தமிழர்கள் தொடர்ந்து அகதிகளாக்கப்படும் கொடுமைகளை சோலை நன்கு பதிவு செய்துள்ளார்.
புலிகளின் வான்தாக்குதல் அதைத் தொடர்ந்து இலங்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்த கட்டுரைகள் இடம்பெறவில்லை. எனினும் ஈழப்பிரச்சனை குறித்து சமீபத்திய நிகழ்வுகளை அறிந்து கொள்ள இந்த நூல் ஓரளவு உதவும்.