தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர் சோலை திண்டுக்கல் மாவட்டம் அய்யன்பாளையத்தை பிறப்பிடமாகக் கொண்டவர். பத்திரிகைத் துறையில் ஐம்பது ஆண்டுகளுக்கு மேற்பட்ட அனுபவத்தை உடையவர். ஜனசக்தி, தீக்கதிர், நவமணி, அலை ஓசை, மக்கள் செய்தி, அண்ணா ஆகிய நாளிதழ்களில் தொடர்ந்து அரசியல் விமர்சனக் கட்டுரைகள் எழுதியவர். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் அண்ணா நாளிதழில் 9 ஆண்டுகள் பொறுப்பாசிரியராக பணியாற்றியவர். தமிழகத்தில் உள்ள இதழ்களில், நாளேடுகளில் அதிகமான அரசியல் விமர்சனக் கட்டுரைகள் எழுதியவரும் இவரே. புரட்சித் தலைவருக்கும் அமரர் ஜீவாவிற்கும் உற்ற நண்பனாக இருந்தவர். இவரது கட்டுரைகளை வெளியிடுவதன் மூலம் தங்களின் வாசகர் எண்ணிக்கையைப் பெருக்கிக் கொண்ட பத்திரிகைகள் பல உண்டு. மக்கள் பிரச்சனைகளில் இவர் எழுதிய எழுச்சி மிகு எழுத்துக்கள் பல மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளன. மாற்றுக் கருத்துக் கொண்டோரும் மதிக்கும் வண்ணம் பிரச்சனைகளை தீர்க்கமாகவும் தொலைநோக்குப் பார்வையுடனும் எழுதுவது இவரது சிறப்பு. ஆளுவோரின் கோபங்களுக்கு அஞ்சியோ அல்லது வேறு எவரின் தயவை நாடியோ இவர் தனது எழுத்துக்களை முடக்கியதில்லை. தமிழக பத்திரிகையாளர்களும் அரசியல் தலைவர்களும் இவருடன் பழகாதவர்கள் என்று எவரையும் கூறிவிடமுடியாது.