தமிழ் மக்களின் வரலாற்றை இந்நூலில் க.ப.அறவாணன் பதினொரு இயல்களாகப் பகுத்துத் தந்துள்ளார். உலகம் கடவுளால் படைக்கப்பட்டது என்ற நம்பிக்கையையும் அது இயல்பாகத் தோன்றியது என்னும் வரலாற்றையும் மானுடத்தோற்றம் என்ற இயலில் காட்டியுள்ளார்.
கி.மு. 4000 வரை உள்ள காலத்தை தொல் பழங்காலம் என்று வரையறை செய்துள்ள தன்மையும் அந்தக்கால மக்களின் வாழ்க்கையை இலக்கியச் சான்றுகளுடன் தெரிவித்துள்ள தன்மையும் நூலுக்கு மதிப்பைச் சேர்க்கின்றன. தமிழர் தாம் வாழ்ந்த நிலப் பகுதியை ஐந்தாகப் பாகுபடுத்தியதையும் அவர்களின் திருமண முறையையும் பழங்குடி மக்களிடையே நிலவிய பல தார மணத்தையும் இந்நூல் விளக்கியுள்ளது. பழங்குடிப் பெண்கள் பல கணவர்களைத் திருமணம் செய்து கொண்டதைப் பல கணவ முறை எனக் குறிப்பிட்டு அதற்கான சான்றுகளையும் நூலில் தெரிவித்துள்ளார். திருமணத்தின் அடிப்படையில் உருவாகும் குடும்ப உறவுகள், பொருளியில் வாழ்க்கை, போர் வாழ்க்கை, அரசியல் முதலானவற்றையும் நூல் விளக்குகிறது.
பழ்ந்தமிழர் பல்வேறு நம்பிக்கைகளைக் கொண்டு வாழ்ந்துள்ளனர் என்பதையும் வீட்டை மெழுகியுள்ளனர், காக்கைக்கு உணவிட்டுள்ளனர், விளைச்சலை இறைவனுக்குப் படைத்துள்ளனர் முதலான பழக்க வழக்கங்களையும் இந்த நூலில் ஆசிரியர் விவரித்துள்ளார். உலகில் உள்ள பல்வேறு இனங்களைப் பற்றிய பல ஆய்வுகளை மேற்கொண்டு தமிழர் பற்றிய பல விளக்கங்களை வெளிப்படுத்தியுள்ள க.ப.அறவாணனின் நுண்ணறிவுக்கு இந்நூல் மற்றோர் எடுத்துக்காட்டு.
பண்டைத் தமிழரின் வாழ்வியலை ஆய்வு நோக்கோடு விளக்கும் இந்நூலை படைத்திருப்பதன் மூலம் க.ப.அறவாணன் தமது தொப்பியில் மேலும் ஒரு வெற்றி இறகைச் சேர்த்துள்ளார் எனலாம்.
- - - 02.04.2006 - - -