ஸ்ரீனிவாசன் - சீதாலட்சுமி இணையரின் மகனான இவருடைய சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை. தென்காசியில் பள்ளிப் படிப்பும், திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் கணிதமும், மதுரை காமராஜர் பல்கலையில் வணிக மேலாண்மையும் கற்றார். முதல் மேடையேற்றம் தென்காசி திருவள்ளுவர் கழகத்தில், தொடர்ந்து கல்லூரி நாட்களில் கணிதம் தொடர்பான போட்டிகளில் மட்டுமல்லாது, கவியரங்கம், பட்டிமன்ற மேடைகளில் கலந்துகொண்டு தமிழ் முழக்கமிட்டிருக்கிறார். சிறு வயதில் திவ்யப் பிரபந்தம் மற்றும் வேத அத்தியயனம் செய்துள்ளார். சென்னையில் தேசியத் தமிழ் வார இதழ் ஒன்றில் பத்திரிகைப் பணியைத் தொடங்கி, பின்னர் கலைமகள் நிறுவனத்திலிருந்து வெளிவரும் மஞ்சரி டையஸ்டின் இதழாசிரியராக சுமார் ஐந்தாண்டு காலம் பணியாற்றினார். சென்னை வானொலியில் அறிவிப்பாளராகப் பணியாற்றியுள்ளார். வானொலி உரைச் சித்திரங்கள் பல எழுதியுள்ளார். பொதிகைத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றுள்ளார். பல இதழ்களில் ஆன்மிகம், பொருளாதாரம், மேலாண்மை, இசை, நாட்டியம் தொடர்பான கட்டுரைகள் எழுதியுள்ளார். பல மேடைகளில் ஆன்மிக, இலக்கியச் சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார்.