1932 இல் பிறந்த இவர், வித்தியோதயாப் பல்கலைக் கழகத்தில் (1965-1978) பணியாற்றியபின்னர் யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் (1978-1996) தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி, தற்போது அதே பல்கலைக் கழகத்தில் தகைசார் ஓய்வுநிலைப் பேராசிரியராகவுள்ளார். தனது இள, முதுமானிப் பட்டங்களைப் பேராதனைப் பல்கலைக் கழகத்திலும், கலாநிதிப் பட்ட ஆய்வை இங்கிலாந்திலுள்ள பேர்மிங்காம் பல்கலைக் கழகத்திலும் பெற்றுக்கொண்டவர். இலக்கியத் திறனாய்வு, இலக்கிந வரலாறு, சமூக வரலாறு, நாடகமும் அரங்கியலும், தொடர்பியல் எனப் பல்வேறு துறைகளில் ஈடுபாடுடையவர். கொழும்பு, களனிப் பல்கலைக் கழகங்களில் வருகை விரிவுரையாளராகவும், கிழக்கிலங்கைப் பல்கலைக் கழகத்தில் வருகைப் பேராசிரியராகவும் (1998-1999), பேர்கிளியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக் கழகம்(1990), கேம்பிரிச் பல்கலைக் கழகத்தின் தென் ஆசிய மையம்( 1983-1984), ஹார்வார்ட் பல்கலைக் கழகம், புது தில்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் வரலாற்றுக் கற்கை மையம் (1982), தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகம் (1982) ஆகியவற்றிற்கு முதுநிலை ஆய்வாளராக சென்றவர். சென்னைப் பல்கலைக் கழகத்திலும்(1998), அனைத்துலக தமிழ் ஆராய்ச்சி நிலையத்திலும், சுவீடனிலுள்ள உப்சலா பல்கலைக் கழகத்திலும்(1992) வருகைப் பேராசிரியராகப் பணியாற்றியவர். தமிழிலும் ஆங்கிலத்திலும் நூற்றிக்கு மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும், நாப்பதிற்கு மேற்பட்ட நூல்களையும், சிற்றாய்வேடுகளையும் வெளியிட்டவர். தற்போது மனைவி ரூபாவதியுடன் கொழும்பில் வசுத்து வருகிறார். இவரது புத்திரிகள் முறையே கிருத்திகா பாலசேகர், தாரிணி புவன், வர்த்தனி ஆவார்கள். இவருக்கு மூன்று பேரர்களும், இரண்டு பேர்த்திகளும் உள்ளனர்.