கங்கை கொண்ட சோழபுரத்தை அடுத்துள்ள இடைக்கட்டு என்னும் சிற்றூரில் பிறந்தவர். பெற்றோர் சி.முருகேசன் - மு.அசோதை. திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் இளங்கலை, முதுகலைப் பட்டம் பயின்றவர். புதுவைப் பல்கலைக் கழகத்தில் இளமுனைவர் பட்டமும், பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர். பாரதிதாசன் பரம்பரை என்பது இவர் தம் ஆய்வுத் தலைப்பு. சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திலும், பாரதிதாசன் பல்கலைக் கழகத்திலும் ஆய்வு உதவியாளராகப் பணி புரிந்தவர். இசைமேதை வீ.ப.கா சுந்தரம் அவர்களின் உதவியாளராக இருந்து தமிழிசைக் கலைக் களஞ்சியப் பணியில் துணை நின்றவர். பழந்தமிழ் நூல்கள், மரபிசை, நாட்டுப்புற இசை ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டவர். தற்பொழுது பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகப் பணி புரிந்து வருகிறார். சிங்கப்பூர், மலேசிய நாடுகளில் தமிழிசை பற்றி உரையாற்றியவர்.