கடந்த இருபது ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வரும் இரா.செல்வராசு தமிழகத்தின் ஈரோட்டைச் சேர்ந்தவர். அடிப்படையில் ஒரு வேதிப் பொறிஞர். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திலும், அமெரிக்காவில் கெண்டக்கி மாநிலத்தின் லூயிவில் பல்கலைக்கழகத்திலும் படித்து வேதிப் பொறியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர்.
தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் இருந்து தமிழ் இணையத்தில் செய்திக் குழுமங்கள், மடலாடற் குழுக்கள், இணைய இதழ்கள் என்று பலவற்றில் எழுதி இருக்கும் இவர் தற்பொழுது
விரிவெளித் தடங்கள் என்னும் வலைப்பதிவில் சமூகம், அனுபவங்கள், பயணங்கள், நுட்பக்கட்டுரைகள் என்று பலதரப்பட்ட வகைகளில் எழுதி வருகிறார். இவரது எழுத்துகள் ஒரு முனையில் கொங்கு வட்டார வழக்குகளில் இருந்து, மறுமுனையில் கணிநுட்பம், வேதிப் பொறியியல் என்று துறைசார்ந்தும் ஒரு அகன்ற வீச்சில் அமைந்திருக்கின்றன.
தமிழின் முதல் வலைப்பதிவுத் திரட்டியான
தமிழ்மணம் தளத்தின் ஆரம்ப காலம் முதல் இன்று வரை நிர்வாகக்குழுவிலும், நுட்பக்குழுவிலும் பங்கு கொண்டிருப்பவர். தமிழ்மணம் இணையத்தை நடத்தி வரும் தமிழ் மீடியா இன்டர்நேசனல் என்னும் இலாப நோக்கற்ற அமெரிக்க அமைப்பின் உயர்நிலைப் பதவிகளை வகித்து வருகிறார்.