கவிஞர் துரையர் என இலக்கிய உலகில் பரவலாக அறியப்பட்ட கலாபூஷணம் சு.துரைசிங்கம் அவர்களைக் கடந்த முப்பத்தைந்து வருடங்களாக அறிவேன். ஆசிரியராக, ஆசிரிய ஆலோசகராக பின்னர் அதிபராக உயர்ந்து வந்தவர் அவர். அவரது பதினாறாவது வயதில், சுன்னாகம் ஸ்கந்த வரோதயக் கல்லூரி மாணவராக இருந்தபோது அவரது முதலாவது கவிதை வெளிவந்தது. அதனைத் தொடர்ந்து பல ஊடகங்களில் எழுதிக் கொண்டிருந்த இவர் 1972இல் தனது தெருவிளக்கு என்ற கவிதை நூலினை வெளிக்கொணர்ந்தார். சிறுவர் பாடல் தொகுதிகள் மூன்று சமயம் சார்ந்த நூல்கள் மூன்று, புவியியல் சார்ந்த நூல்கள் இரண்டு ஆகியவை இதுவரை வெளிவந்துள்ளன. கவிக்குரல்கள் என்ற ஒலிப்பதிவு நாடாவும் இந்து தர்மத்தில் பத்துக்கள் என்ற தொலைக்காட்சித் தொடரும் கூட இவரால் தயாரிக்கப்பட்டவை. இந்து தர்மத்தில் பத்துக்கள் மாணவர்களுக்கு மிகப் பயனுள்ள தயாரிப்பாக அமைந்ததோடு மூன்றுமுறை தேசிய தொலைக்காட்சியில் தொடர்ந்து ஒளிபரப்பாகிய பெருமையும் பெற்றது.
2004ம் ஆண்டு கலாசார அமைச்சு இவருக்குக் கலாபூஷணம் விருதை வழங்கிக் கௌரவித்தது. தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பதும், மற்றைய எழுத்தாளர்களை எழுதத் தூண்டுவதும், சக எழுத்தாளர்களுடன் நல்ல உறவைப் பேணுவதும், எப்போதும் மனிதாபிமானத்துடன் வாழ்ந்து காட்டுவதும் இவரது சிறந்த ஆளுமைக் கூறுகளைத் துணிந்து கூறலாம்.