"எஸ்.பொ" என்று அன்புடனும் நேசத்துடனும் அழைக்கப்படும் எஸ்.பொன்னுத்துரை சமகாலத் தமிழ் இலக்கியத்தில் ஓர் இமயம். கவிதை, சிறுகதை, நாடகம், வாழ்க்கை வரலாறு எனப் பன்முக வல்லமை இவர் எழுத்தின் தனிச்சிறப்பு. 1932 இல் இலங்கை யாழ்ப்பாணம் அருகில் உள்ளதும் கந்தசாமி கோவிலால் புகழ் பெற்றதுமான நல்லூரில் பிறந்தார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலும், சென்னை கிறித்தவக் கல்லூரியிலும் உயர்கல்வி பயின்றார். உலகின் ஐந்து கண்டங்களிலும் பயணம் செய்த அனுபவங்களால் செழுமை பெற்ற இவர் நையீரியாவில் ஆங்கிலத்துறைத் தலைவராகப் பணிபுரிந்தவர். 1990 முதல் ஆஸ்திரேலியக் குடியுரிமை பெற்று அங்கேயே வாழ்ந்து வருகிறார். தமிழில் முதன்முதலில் நனவோடை உத்தி முதலிய புதுமைக்ள புனைந்து படைப்புகள் தந்த எஸ்.பொ பதினாறு வயதுமுதல் இன்றுவரை பெருகியோடும் இலக்கிய மாநதி. 2000 பக்கங்களைக் கொண்ட "வரலாற்றில் வாழ்தல்" என்ற தன் வரலாற்றை நிகரற்ற எழுதி இருப்பது இவர்தம் மகத்தான படைப்புத் திறனுக்கு எடுத்துக் காட்டு.