பொருநைச் சீமையான திருநெல்வேலி மாவட்டம், தென்காசி வட்டத்தில் பிறந்தவர். தென்காசி வட்டத்திலுள்ள அய்யாபுரம் என்ற சிற்றூர் இவரது சொந்த ஊர். தந்தையார் சண்முகவேல், தாயார் ராமலட்சுமி அம்மையார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழைக் கற்று, அங்கேயே சில ஆண்டுகள் பணியாற்றிப் பின்னர்த் தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் 25 ஆண்டுகள் பணியாற்றிய பாங்குடையவர். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முதல் இளைஞர் நலத்துறை இயக்குநராகப் பணியாற்றிய பெருமையுடையவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் அஞ்சல்வழிக் கல்வித் துறையில் நெல்லை மையப் பொறுப்பாளராக ஏழு ஆண்டுகள் பணியாற்றிய பொற்புடையவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ''செனட்'' கல்விக் குழு உறுப்பினராகப் பல ஆண்டுகள் செயலாற்றியவர். பல்வேறு பல்கலைக்கழகங்களில் பாடக்குழு உறுப்பினராகச் செயலாற்றியவர். நாட்டுப்புற இலக்கியத்தில் தனிமுத்திரை பதித்த இவரது ''திருநெல்வேலிப் பகுதியில் சிறுதெய்வ வழிபாடு'' என்ற நூல் சிறுதெய்வங்களைப் பற்றி வெளிவந்த முதல் தமிழ் நூல். இவர் எழுதியுள்ள நூல்கள் இருபத்தைந்து. யாத்த கட்டுரைகள் எண்பது. கலந்துகொண்ட கருத்தரங்கங்கள் பல. இவர் பெற்ற பட்டங்கள் பல, வகித்த பதவிகள் பல, நூற்றாண்டு விழாவை நோக்கி வீறுநடைபோடும் தென்காசி திருவள்ளுவர் கழகத்தின் தலைவர். இரண்டு பெண் குழந்தைகட்குத் தந்தை. ஒரு பேரன், ஒரு பேத்திக்குத் தாத்தா.