தந்தை பெரியாரைத் தனது பதினான்காம் அகவையில் பக்கத்தில் நின்று பார்த்த நாள் முதலாய், பெருமையின் உச்சியில் நின்று, பகுத்தறிவுப் பாடம் படிக்கத் தொடங்கினார். இன்றளவும் தொடர்ந்து படிக்கிறார், பலரையும் படிக்க வைக்கிறார். தமிழ் மறை மன்றம், திருக்குறள் பேரவை முதலிய அமைப்புக்கள் வாயிலாகப் பகுத்தறிவையும், குறள் நெறியையும் மும்பை நகரில் பரப்பிய சுயமரியாதைக்காரர். 'சீர்வரிசை' என்னும் திங்கள் இதழின் ஆசிரியராகத் திகழ்ந்து , இதழியல் துறைக்குப் பெருமை சேர்த்தவர். பொதுவுடமை, பகுத்தறிவு, குறள்நெறி கலந்து இவர் எழுதிடும் வாழ்வியல் நெறிகள் உலகத் தமிழர் அனைவருமே படித்துப் பயன்பெறத்தக்கவை. இவரது 'நிகழ்வுகள் - சிந்தனைகள்' பலரால் வெகுவாகப் பாராட்டப் பெற்ற நூலாக விழங்குகிறது. 'நூல் வரிசை' ப் பட்டியலில் 'சீர்வரிசை' சண்முகராசன் எழுதிய எல்லா நூல்களும் மானுட வாழ்வின் மாண்பினை எப்போதும் எல்லாருக்கும் எடுத்துச் செல்லும் என்ற நம்பிக்கையைத் தரும் எழுத்துக்கள் இவருடையவை.