பேராசிரியர் டாக்டர் கம்பம் சாகுல் அமீது கம்பத்தில் பிறந்து, தமிழ் மணக்கும் மதுரைத் தியாகராசர் கல்லூரியில் இளங்கலை பொருளியில் பயின்று, தலையகர் சென்னைக்குப் பெருமை சேர்க்கும் மாநிலக் கல்லூரியில் முதுகலைத் தமிழ் இலக்கியம் பயின்றவர். கவிஞர் நா.காமராசன், கவிஞர் இன்குலாப், கவிஞர் மு.மேத்தா போன்றோர் கல்வி பயின்ற மதுரைத் தியாகராசர் கல்லூரியில் அதே காலகட்டத்தில் பயின்றவர். மாநிலக் கல்லூரியில் பயின்றபோது தமிழ் இலக்கிய மன்றச் செயலாளராகச் சிறப்புடன் தமிழ்ப்பணியாற்றியவர். கவிஞர் பொன்.செல்வகணபதி உடன் பயின்ற தோழர். இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்ற ஆய்வாளர்களில் முன்னோடியாகத் திகழ்கிறார். வாணியம்பாடி இசுலாமியக் கல்லூரியில் கவிக்கோ தலைமையில் பதினொரு ஆண்டுகளுக்கு மேலாகப் பேராசிரியராகப் பணியாற்றியவர். புதுக்கல்லூரித் தமிழ்த்துறையில் பதினெட்டு ஆண்டுகட்டு மேலாகத் திறம்படப் பணியாற்றி, ஏராளமான ஆய்வாளர்களை உருவாக்கியுள்ளார். இவர் நெறியாழ்கையின் கீழ் எண்மர் பல்வேறு தலைப்புகளில் ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றுள்ளனர். இவரது சீரிய முயற்சியால் புதுக்கல்லூரித் தமிழ்த் துறையில் முனைவர் பட்டப் படிப்பிற்கான முழுநேர மற்றும் பகுதி நேர ஆய்வு மையம்தொடங்கப்பட்டுச் சிறப்புடன் செயல்பட்டு வருகிறது. இவரது நெறியாள்கையில் பத்துப்பேர் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டுள்ளனர். கம்பம் சாகுல் அமீது அவர்கள் எழுத்திலும் பேச்சிலும் தனக்கென்று ஒரு தனி முத்திரை பதிப்பவர். இவர் இளம் புதுக் கவிஞர்களை அடையாளம் கண்டு அவர்களை ஊக்கப்படுத்துவதும், ஆய்வாளர்களைப் புதிய சிந்னைப் போக்கில் ஆக்கப்படுத்துவதும் இவருக்கே உரித்தனா தனித்தன்மையாகும்.