இலங்கையின் திருக்கோணமலையில் 20.04.1939 இல், தருமராசன்-அன்னலட்சுமி தம்பதியினருக்கு ஒரே மகனாகப் பிறந்தவர். இலங்கையில் பிறந்தாலும், அறுபதுகளின் இறுதியிலேயே இந்தியா வந்து, தமிழ் நாட்டு எழுத்தாளராகவே வாழ்ந்து, 1971 இலிருந்து சென்னையில் தனது பெரும்பாலனா வாழ்நாளைக் கழித்தவர். புற்றுநோய்ப் பாதிப்பால், தமிழ்நாட்டில் வேலூரை அடுத்த கரடிக்குடி என்னும் ஒரு சிறு கிராமத்தில் 06.01.1997 இல் அடக்கம் பெற்றார். இவர், தருமு சிவராம் என்றே ஆரம்ப காலங்களில் அழைக்கப்பட்டார். எண்கணித ஈடுபாட்டால், விதவிதமாகத் தன் பெயரை மாற்றி எழுதிக்கொண்டே இருந்தார். இலக்கிய ஈடுபாட்டையும் மீறி நின்றது அவரது ஆன்மீக அக்கறை. நவீன தமிழின் முதன்மையான கவிஞராகவும், முதன்மையான விமர்சகராகவும் சிறுகதையாசிரியராகவும் ஓவியராகவும் களிமண் சிற்பங்கள் செய்வதில் வல்லவராகவும் பிரமிள் விளங்கினார். படிமக் கவிஞர் என்றும் ஆன்மீகக் கவிஞர் என்றும் சிறப்பிக்கப்பட்ட இவரது கவித்துவம், இரண்டாயிரமாண்டுத் தமிழ்க் கவிதை வரலாற்றில் தனித்துயர்ந்து நிற்பதாகும். இவரது கவிதையும் உரைநடையும், தமிழ் மொழிக்கு நவீன தொனியையும், தமிழ் அறிவுலகிற்கு அதுவரையில்லாத பரிமாணத்தையும் அளித்தன. ஓவியராகவும் சிற்பியாகவும் தொடங்கிய இவரது படைப்பு வாழ்க்கை 1960 இல் சென்னையில் இருந்து வெளிவந்த "எழுத்து" பத்திரிக்கையில் எழுதத் தொடங்கிய பிறகு, புதுக்கவிஞராகவும், விமர்சகராகவும் மாற்றம் கொண்டு, உயர்ந்தபட்சக் கற்பனை திறனும் உள்ளூடுருவும் பகுப்பாய்வுச் சக்தியும் கொண்ட எழுத்தாளராக அவரை நிலை நிறுத்தியது. இலங்கையில் பல்வேற9 இடங்களில், இவர் சிற்சில காலம் வசித்திருக்கிறார். இந்தியாவில் டெல்லி, திருவனந்தபுரம், பூதப்பாண்டி, நாகர்கோவில், மதுரை, சென்னை போன்ற இடங்களில் வாழ்ந்திருக்கிறார். சி.சு.செல்லப்பா, மௌனி, வெங்கட் சாமிநாதன், சுந்தர ராமசாமி, கிருஷ்ணன் நம்பி, ந.முத்துசாமி, ஞானக்கூத்தன், கி.அ.சச்சிதானந்தன், டேவிட் சந்திரசேகர், ராஜமார்த்தாண்டன், விஷ்ணு நாகராஜன், அழகியசிங்கர், காலசுப்பிரமணியம், முன்றில் மகாதேவன், வி.எஸ்.சத்யா போன்ற பலரிடமும் பழகி வந்திருக்கிறார். இவர்களில் பலரைப் பின்பு கருத்தியல் ரீதியரில் கடுமையாகச் சாடியுமிருக்கிறார். ஜே.கிருஷ்ணமூர்த்தியின் மேல் அவருக்கு அபாரமான ஈடுபாடு இருந்து வந்துள்ளது. இளமையில் அவரை அதிகம் பாதித்தவர் திருக்கோணமலை இல்லத்துறவி சாது அப்பாத்துரை. யோகி ராம்சுரத்குமார், பேடா போன்ற பல ஞானிகள் தொடர்பும் குறிப்பிடத்தகுந்தது. நவீன தமிழ் இலக்கிய உலகில் ஒரு "இன்பாந்த் டெரிபிள்" ஆக விளங்கியவர் பிரமிள். ஆரம்பத்தில் "எழுத்து" பத்திரிக்கையும், இடையில் "கொல்லிப்பாவை"யும் இறுதியில் "லயம்" பத்திரிக்கையும் அவரது படைப்பியக்கத்திற்கு களம் அமைத்துத் தந்தன. பிரமிளின் பெரும்பாலான நூல்கள் "லயம்" வெளியீடுகளாகவே வெளிவந்தன. 1995 இல் கும்பகோணம் "சிலிக்குயில்" பிரமிளுக்குப் "புதுமைப்பித்தன் வீறு" வழங்கிது. 1996 இல் நியூயார்க் தமிழ்ச்சங்கத்தின் "விளக்கு" அமைப்பு புதுமைப்பித்தன் விருது வழங்கிச் சிறப்பித்தது. பிரமிளின் மறைவிக்குப் பிறகு, அவரது நெருங்கிய நண்பராகவும் ஆய்வாளராகவும் வெளியீட்டாளராகவும் அவரது அனைத்துப் படைப்புகளுக்கும் பிரமிளாலேயே உரிமை வழங்கப்பட்டவராகவும் விளங்கும் கால சுப்பிரமணியன், பிரமிளின் அனைத்து எழுத்துக்களையும் திரட்டி, 13 நூல் தொகுதிகளாக பிரித்துத் தொகுத்தார். அவற்றில் இதுவரை 6 நூல்கள் வெளிவந்துள்ளன, இன்னமும் 7 நூல்கள் பிரமிளின் எழுபதாவது பிறந்த நாளுக்கு வெளிவரவுள்ளன.