நூலக தகவல் அறிவியல் கலைக்களஞ்சிய அகராதி
Encyclopaedic Dictionary of Library & Information Science
By Arulanantham Srikanthaluxmy ©
சொற்றொகுதி : அச்சுக்கலை
Printing

தாள், துணி அல்லது வேறு பொருள்களின் பரப்பில் எழுத்து, படம் அல்லது ஓவியங்களைப் பதிக்கும் கலையும் அத்தொழில்நுட்பமும் அச்சுக்கலை என வழங்கப்படுகின்றது. அசையும் எழுத்துக்களின் உருவாக்கத்துடன் தான் அச்சுக்கலை முழுமையான நிலையை அடைந்தது. இலச்சினைகளை இடுதல், முத்திரைகளைப் பொறித்தல், கல்வெட்டிலிருந்து நகல் எடுத்தல், பட்டில் அச்சடித்தல், செதுக்குத் தகடுகள், கல்லச்சுப் படிமைகள், மர அச்சுப் படிமைகள் முதலியவற்றிலிருந்து பிரதி எடுத்தல், நாணயத் தாள், சீட்டு அட்டை, வழிபாட்டுப் படங்கள் போன்றவற்றை அச்சடித்தல் ஆகிய பல வழிகளில் பல படிகளைக் கடந்த பின்னரே அசையும் எழுத்துக்களைக் கண்டுபிடிக்க நேர்ந்தது. 15ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் அடுக்கிக் கோக்கக் கூடிய உலோக அச்சு எழுத்துக்களின் கண்டுபிடிப்புடன் மேலை நாட்டில் அச்சடித்தல் செய்முறை தொடங்கியதாகும். அச்சடித்தலின் கண்டுபிடிப்புப் பற்றிய செய்திகள் பெரும்பாலும் கூட்டன்பேர்க்கை இணைத்தே பேசப்படுகின்றன. ஏனெனில் அச்சடித்த எல்லா நூல்களையும்விட மிகவும் பெயர்பெற்ற நூலாகக் கருதப்படுவது கூட்டன்பேர்க் வௌியிட்ட விவிலிய நூலாகும். டச்சு நாடு அச்சடிப்பின் கண்டுபிடிப்பினை லோரன்சு, ஜான்மூன் காஸ்டர் என்ற ஹார்லம் நகரத்தைச் சேர்ந்த அறிஞருடன் இணைத்துக் கூறுகிறது. ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் உள்ள அரும்பொருட் காட்சியகங்களில் தொட்டில்முறை அச்சடிப்பாலான அச்சுச் சிதிலங்கள் காக்கப்பட்டு வருகின்றன. கூட்டன்பேர்க்குக்கும் காஸ்டருக்கும் முன் கி.பி 1100ல் மண்ணாலான கோக்கும் தனித்தனி அச்செழுத்துக்களைக் கொண்டு பீ செங் என்ற சீன நாட்டினர் அச்சடித்துள்ளார். கி.பி 764ல் ஜப்பான் நாட்டில் சொட்டாக்க அரசில் முதன்முறையாகப் பேரளவு அச்சடிப்புச் செயல்முறை தொடங்கியது. வழிபாட்டுப் பாடல்களின் கோடிக்கணக்கான படிகள் களிமண்ணால் செய்யப்பட்ட எழுத்துக்களின் மேல் உலோக மேற்புச்சுப் பூசி அந்த எழுத்துக்களைக் கொண்டு அச்சடிக்கப்பட்டன.

பல்லாயிரம் கோடி மடங்கு பணப்புழக்கமுள்ள இவ் அச்சடிப்புத்தொழில் மனிதகுல வரலாற்றிலேயே ஒரு சிறப்புமிக்க தொழிலாகும். கூட்டன்பேர்க் பயன்படுத்திய கோக்கும் அச்செழுத்துக்களைக்கொண்டு முதன்முறையாக தனித்தனி எழுத்துக்களால் சொற்களையும், சொற்கள் மூலம் வரிகளையும், வரிகளைக்கொண்டு பக்கங்களையும் மை தடவி அச்சடித்து, பின்னர் மையைக் கழுவிவிட்டு எல்லாப்பக்கங்களிலும் உள்ள வரிகளில் அடங்கிய சொற்களில் உள்ள எழுத்துக்களை மறுபடியும் தனி எழுத்துக்களாகப் பிரிக்கமுடிந்தது. தனி அச்சு எழுத்துக்களைக் கண்டுபிடிக்க முன் மேலைநாட்டில் அச்சுக்கட்டையால் (block) அச்சடிக்கும் முறை மட்டுமே நிலவியது. கூட்டன்பர்கும் காஸ்டரும் இம்முறையைக் கண்டுபிடிக்கும் முன்பு ஒவ்வொரு புதிய படியையும் கையால் எழுதி உருவாக்கவேண்டி இருந்தது. தூவிகள், இறகுகள் கொண்டு ஆட்டுத்தோலில் எழுத்துக்கள் எழுதப்பட்டன. பிறகு இவற்றில் வேண்டிய கையெழுத்துக்களோ படங்களோ அழகு வரைவுகளோ பொன் இலைகள் கொண்டு பல வண்ணங்களில் வரையப்பட்டன. அச்சு கண்டுபிடித்ததும் மிக எளிமையாக முற்றொருமித்த படிகளை உருவாக்கல் எளிதாகியது. இது அச்சடிப்பாளரின் தொழில்நுட்ப வசதியைப் பொறுத்து எளிய செலவில் குறைந்த காலத்தில் எண்ணற்ற செய்திகளைப் பரப்ப உதவியது. இதனால் எழுத்தறியாமையைப் போக்கி கல்வி பரவலாகியது. தொடக்க காலத்தில் இது ஒரு மாயமந்திரமாகவே கருதப்பட்டது. எனவே அச்சுத்தொழிலுக்கு அதன் தொடக்க காலத்தில் "கரும்பேய்க் கலை" என்ற பெயர் நிலவியது. அச்சடிப்புத் தொழில் தற்கால முன்னேற்றங்களால் மனிதகுல நாகரிகத்தின் மதிப்பு வாய்ந்த செய்தித் தொடர்பு அமைப்பாக வளர்ந்துள்ளது. அச்சுக் கோத்தல், அச்சடித்தல் அச்சடித்த பொருள்களைப் போக்குவரத்து செய்து பரப்பல் ஆகிய துறைகளில் பல மாற்றங்கள் ஏற்படுவதற்கான அகநிலை வாய்ப்புக்கள் தற்போது நிலவுகின்றன. கீழே தரப்படும் தனித்தன்மை வாய்ந்த அணுகுமுறைகளையும் வளர்ச்சி முறைகளையும் கவனித்தால் அச்சுத் தொழிலின் எதிர்கால வளர்ச்சிக்கான வாய்ப்புகள் மிகவும் தௌிவாகும்.

அச்சுக்கோப்புத் தொழிலில் ஏற்பட்டுள்ள நேரடிப்பதிவு முறைகளும் ஔிப்பட முறைகளும் உலோக உருக்கு முறைகளுடன் போட்டியிடவல்லன. தற்காலத்தில் தட்டுப்பதிவு முறையால் தாளில் அல்லது காந்தநாடாவில் அச்சடிப்புப் பக்கத்தில் படியை உருவாக்க முடியும். அவற்றை கணிப்பொறிக்குள் ஊட்டி எல்லா வரிகளையும் சரிப்படுத்தித் திருத்தி அச்சுத்தட்டு உருவாக்குவதற்கு ஏற்ற படியை அல்லது நகலை உருவாக்க முடியும். தன் முகவரித்தாள்கள் (letterhead), பன்னிற அச்சடிப்புகள், ஒற்றை வரித்தாள்கள் (monograms) ஆகியவற்றை ஒற்றைப்பதிவு முறையால் அச்சிட முடியும். அரைவரித்திரை இன்றியே நிறத்தையும் தொடர் வரியையும் (continuous tone) மீளாக்கம் செய்யக்கூடிய திரையிலாக் கல்லச்சு வரைமுறை தற்காலத்தில் (screenless lithography) உருவாக்கப்பட்டுள்ளது. நிலைமின் செயல்முறைகளால் வண்ணநகலை உருவாக்கல். செய்தித் தாள்களிலும் பல வண்ணங்கள் அச்சடிக்கப்படுகின்றன. அதற்கான முன்னடிப்புச் செயல்முறைகள் (pre-printing processes) தற்காலத்தே உருவாகியுள்ளன. ஒரு தொழிலகத்தின் தேவைகளுக்கு நகல்வரை முறையால் (xerograph) ஒரு சில படிகளை எடுத்துக் கொள்ளமுடியும். விரிந்து வளர்ந்து வரும் நௌிவியல்புடைய தன்மையால் அச்சுத்தொழில் ஒரு முறையிலிருந்து மற்றொரு முறைக்கு மாறிக்கொண்டே இருப்பதால் ஒவ்வொரு முறையையும் அதனுடைய விலை, தரம், அளவு ஆகிய பண்புகளை ஒப்பிட்டு மதிப்பிட முடியாது. அச்சுத் தொழிலில் ஏற்பட்டுள்ள ஒவ்வொரு வளர்ச்சியும் ஒவ்வொரு குறிப்பிட்ட தேவையை நிறைவு செய்கிறது. அந்த அளவில் அது நாட்டுப் பொருளாதாரத்திற்கு வலுவுட்டுகிறது (அறிவியல் களஞ்சியம் 2005). *உருவரை தகட்டுப் பதிப்பு, *ஔிப்படக் கலை, *செதுக்கு அச்சுக்கலை, *பட அச்சுக்கலை, *புடைப்பு அச்சுக்கலை, *தள அச்சுக்கலை, *நிற அச்சுக்கலை, *புடைப்புக் கைச்செதுக்குக்கலை ஆகியவற்றின் ஒன்றிணைநத சேர்க்கையாகவே அச்சுக்கலை கருதப்படுகிறது.

அச்சுக்கரு
Index
அச்சுக் குடும்பம்
முற்றுப் பெறவில்லை, தயாரிப்பில் உள்ளது......

எண்ணம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan Mobile : +91 - 9840254333