கோரல் நிறுவனத்தின் வெக்டார் வகை படங்கள் வரைவதற்காக உருவாக்கப்பட்டுள்ளதே கோரல்டிரா மென்பொருளாகும். தற்போது 15வது பதிப்பு கோரல்டிரா எக்ஸ்5 என்ற பெயரில் புழக்கத்தில் உள்ளது. விரைவில் 16வது பதிப்பு வெளிவரவுள்ளது.
நமது பயிலகத்திலிருந்து வெளியிட்ட முதல் புத்தகம் இந்த கோரல்டிராவின் 12வது பதிப்பிற்காக சித்திரமும் மவுஸ் பழக்கம் என்ற பெயரில் வெளியான புத்தகமேயாகும்.
புத்தகத்தைப் படிப்பவர்கள் எந்த நிலையில் இருந்தாலும் அவர்களுக்கும் எளிமையாக புரியும் விதத்தில் எழுதப்படவேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டதே இந்த நூலாகும். கணினி வரைகலையில் படங்கள் வரைவதற்காக பயன்படுத்தப்படும் மென்பொருளான இதன் ஒவ்வொரு கருவிகள் மற்றும் கட்டளைகள் பற்றிய விரிவான விளக்கம் இந்த நூலில் கொடுக்கப்பட்டுள்ளது. கருவிகள், துணைக்கருவிகள், மெனுக்கள், கட்டளைகள் என்று ஒவ்வொன்றிற்கும் தேவையான விளக்கப்படங்கள் இந்த நூலில் பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
கருவிகளை பயன்படுத்தும் விதம் செயல்முறையாக விளக்கப்பட்டுள்ளது இந்த நூலின் சிறப்புத் தன்மைகளில் ஒன்றாகும். முற்றிலும் புதியவர்கள் இந்த புத்தகத்தை அப்படியே படிக்கத் துவங்கக் கூடாது; எவ்வாறு படித்து பயிற்சி எடுக்க வேண்டும் என்பதும் இந்த நூலில் தனியே கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வரிசைப்படி பக்கங்களை படித்தால் சரியான முறையில் கோரல்டிராவை பழகிவிடலாம். நமது பயிலகத்தில் பயிற்சிக்கு வரும் மாணவர்களுக்குக் கொடுக்கும் வழிமுறையை இங்கு கொடுத்துள்ளோம். இதனால் புத்தகத்தைப் படித்தே சரியான பாடத்திட்டப்படி பயிற்சி பெறமுடிகிறது; நேரில் பயிற்சிக்கு வரவேண்டும் என்ற கட்டாயம் கிடையாது.
இந்த புத்தகம் வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதன் காரணமாகவே தொடர்ந்து நமது பயிலகத்திலிருந்து கணினி வரைகலைத் தொடர்பான புத்தகங்களை வெளியிட்டு வருகின்றோம்.
மேலும் கோரல்டிராவின் 12வது பதிப்பிற்காக நாம் வெளியிட்ட சித்திரமும் மவுஸ் பழக்கம் புத்தகம், தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2005ம் ஆண்டிற்கான கணினி இயல் பிரிவில் சிறந்த நூல் பரிசை பெற்றது.