நூலாசிரியர், நூலின் முன்னுரையையும் முடிவுரையையும் இவ்வாறு பதிவு செய்கிறார்.
நூலுக்கு இது முன்னுரை அன்று. இந்த நூலே ஒரு முன்னுரை
சமுதாயம், பொருளதிகாரம், அரசியல் ஆகியவை மனித வாழ்வை வழிநடத்துகிற முப்பெரும் பரிமாணங்களாகும். ஒவ்வொரு இனமும் தம்மை வளப்படுத்திக் கொள்ளவும், மென்மேலும் உயர்த்திக் கொள்ளவும், எந்தெந்த கோட்பாடுகளும் நெறிமுறைகளும் தமக்குப் பொருந்தி வருகின்றனவோ அல்லது துணைபுரிகின்றனவோ அவற்றை அடித்தளமாக அமைத்துக்கொண்டு அப்பரிமாணங்களை உருவாக்கிக் கொள்கின்றன.
இந்திய மண்ணின் மக்களும் தம் வாழ்க்கை நெறிமுறைகளுக்கு ஏற்றவாறு சமுதாய, பொருளாதார அரசியல் பரிமாணங்களை வகுத்துக்கொண்டு உயர்ந்த நிலையில் உலகத்திற்கே வழிகாட்டியாக, நாகரிகத்தின் உச்சமாக வாழ்ந்து காட்டினர்.
அது ஒரு காலகட்டம்.
பின்னர் எற்பட்ட பல வரலாற்று நிகழ்ச்சிகளும் அதனால் விளைந்த மாற்றங்களும் சில புதிய அயல் மக்களை இந்திய நாட்டில் காலூன்றவும், குடியமரவும் இடந்தந்து விட்டன. அதன் பயனாக, அந்த அயல் மக்களின் கோட்பாடுகளும் வாழும் முறைகளும் இந்திய மண்ணில் நடமாடத் தொடங்கின.
தத்தம் மக்களின் உயர்வுக்கு முயன்ற ஒவ்வொரு சமுதாயமும், மாற்றாரின் கோட்பாடுகளை சிதைக்க முற்படுவது இயல்பு. அதற்காக தமக்குச் சொந்தமான கோட்பாடுகளை ”விளைபயிர்” எனவும் மற்றவர் கோட்பாடுகளை களைபயிர்” எனவும் அவை வாதிட்டு விளக்கம் கூறும். இது ஒரு கடும் போட்டியாக சமுதாயங்களுக்கிடையே நடைபெறும். அந்தப் போட்டிக் காரியங்கள் இந்தியாவில் வெகு அளவில் நிகழ்ந்தன. இந்தப் போட்டியின் இறுதியில் களையாக்க் கருதப்பட்டு எறியப்பட்டவைகளில் பெரும்பான்மையானவை இந்திய மண்ணுக்குரிய கோட்பாடுகளாகும்.
அயலார் சூழ“ச்சிகளையும் பொய்மைகளையும் புரிந்து கொள்ள இயலாத அடித்தளத்து மக்கள், மாற்றார் சொல்வதைக் கேட்டு தமது சொந்த வாழ்க்கை முறைகளை தாமே முன்னின்று ஒதுக்கியும் அழித்தும் செயல்பட்டனர். இப்படிப்பட்ட அவலங்கள் இந்திய வரலாற்றில் நிரம்பி வழிகின்றன.
அதன் பயனாக இந்தியாவின் அடித்தளத்து மக்கள் அயலவர்களின் கொள்கைக் கோட்பாட்டுச் சிறைக்குள் அடைபட்டனர். செல்வாக்கு இழந்தனர். ஏழ்மையும் அறியாமையும் அவர்களை நன்கு பற்றிக் கொண்டன. இந்திய மக்களின் மேம்பாட்டிற்கு உண்மையாக முயற்சி செய்பவர்கள், முதலாவது செய்ய வேண்டுவது என்னவெனில் இதுகாறும் ஒதுக்கப்பட்டிருந்த இந்த மண்ணின் சொந்த கோட்பாடுகளை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வருவதாகும்.
முற்காலத்தே வாழ்ந்த மக்களின் நாகரிகத்தையும் வரலாற்றையும் கண்டறிவதற்கு அகழ்வு ஆராய்ச்சிகள் எவ்வாறு பயன்படுகின்றனவோ அதைப்போல சமுதாயம், அரசியல் பொரளாதாரம் ஆகிய முப்பெரும் துறைகளில் இந்திய மண்ணுக்கே உரித்தான கோட்பாடுகள் எவை எவை எனக் கண்டறிய ”அகழ்வு” ஆராய்ச்சிகள் உடனடியாக நடத்தப்பட வேண்டும்.
அயலார் பாதிப்பினால் இந்திய மண்ணின் சொந்தக் கோட்பாடுகள் இன்றைக்கு உடைந்தும் பழுதுபட்டும் புதையுண்டு ஆங்காங்கே காணக் கிடக்கின்றன. அவற்றையெல்லாம் வெளியே கொண்டு வந்து தூசி தட்டி, பழுது நீக்கி, தூய்மைப்படுத்தி அவைகளின் சொந்த மக்களுக்கே அவற்றை உடனடியாக அறிமுகப்படுத்த வேண்டும்.
இவ்வழியில், இந்திய மக்களின் சொந்தப் பொருளாதாரக் கோட்பாட்டைக் கண்டறிய எடுத்த எம்முயற்சியில் எமக்கு வெற்றி கிட்டியிருக்கிறது. எம்முயற்சியில் தெரிய வந்த இந்தியக் கோட்பாடு ”ஒப்புரவு” ஆகும்.
அந்த ஒப்புரவினைப் பற்றிய முன்னுரையே இந்நூல்.
இது முடிவுரை அல்ல. தொடக்கம்
நாம் இதுவரை தேடியதிலிருந்து எமக்குக் கிடைத்த இந்திய மண்ணின் ஒப்புரவுக் கோட்பாட்டினை முன்னிறுத்திச் செயல்படுத்தினால் உலகமே பாராட்டும் வண்ணம் ஒரு மாபெரும் பொருளாதாரப் புரட்சியை இந்தியாவில் நடத்திக் காட்ட இயலும். இது எம்முடைய நம்பிக்கை மட்டுமல்ல, உறுதியும் கூட.
நம்முடைய இலக்கிய மண்மேடுகள் ஒப்புரவுக் கொள்கையின் முழு பரிமாணத்தையும் அதன் எல்லை கடந்த வல்லமையையும் புரிந்து கொள்வதற்கு இடந்தராமல் புதைத்து வைத்திருக்கின்றன.
ஒரு நேரத்தில் எம்மிடம் தட்டுப்பட நேர்ந்த ஒரு சிறு முனையில் இருந்து தொடங்கி அகழ்ந்து பார்த்த போதில் அதன் முழுப்பரிமாணமும் மெல்ல மெல்ல எமக்கு முகம் காட்டுகிறது.
இந்தியர்தாம் என்றில்லை. ஏழ்மையின் பிடிக்குள் சிக்கச் சீரழிகின்ற மனித குலம் முழுமைக்கும் ஒரு பொருளாதார விடிவை நிரந்தரமாக ஒப்புரவினால் வழங்கயியலும். ஒப்புரவு என்பது ஒரு உலகம் தழுவிய கொள்யாக இன்றைக்கு கிழக்கு – மேற்கு பின்னியிருக்கும் பொருளாதாரச் சிறையிலிருந்து மனித குலத்தை விடுவிக்கும் மந்திரமாக ஒளிரப்போகிறது.
இத்துணை வல்லமையுடைய ஒப்புரவை நாம் இங்கே அறிமுகப்படுத்துகிறோம். அறிமுகத்துடன் நாம் நிறுத்திக் கொள்ளப் போவதில்லை. உங்கள் துணையுடன் காரியங்கள் தொடரும்..........
( ஆசிரியரின் இயற் பெயர் ச.சண்முகசுந்தரம் - இந்நூலை சிதம்பர சண்முகம் என்ற பெயரில் தந்துள்ளார் )