தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


வனங்கள் - ஓர் அறிவியல் விளக்கம்
பதிப்பு ஆண்டு : 2009
பதிப்பு : முதற் பதிப்பு
ஆசிரியர் :
சண்முகசுந்தரம், சs_shanmugasundar@yahoo.com
பதிப்பகம் : மணிவாசகர் பதிப்பகம்
Telephone : 914425361039
விலை : 150.00
புத்தகப் பிரிவு : வனவியல்
பக்கங்கள் : 336
கட்டுமானம் : கெட்டி அட்டை
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :

அணிந்துரை

வனவியலில், நமது முன்னோடி அறிஞர்களில் ஒருவராகவும், தொலைநோக்கு அறிவியல் சிந்தனையாளராகவும் விளங்கும் முனைவர் சண்முகசுந்தரம் அவர்கள், “வனங்கள் - ஓர் அறிவியல் விளக்கம்” என்ற புலமைமிக்கதொரு நூலை மிகச் சரியான காலத்தில் படைத்துள்ளார். நீர்வளச் சுழற்சியை ஒழுங்குபடுத்துவதும், வான்சூழலைக் காப்பாற்றுவதும், மூலிகை போன்ற பலதரப்பட்ட மரனில் பண்டங்களை மக்களுக்கு வழங்குவதும், உயிரினப் பரிவார வேறுபாடுகளைக் பாதுகாப்பதும், கரிச் செறிப்பின் வாயிலாகப் புவிக்கோளம் சூடேறுவதைத் தவிர்ப்பதும் ஆகிய வனங்களின் பலதிறப்பட்டப் பணிகள் மனித பாதுகாப்பிற்கும் நல்வாழ்விற்கும் உயிர்நாடியாக விளங்குகிறது என்பது இப்போது மிக்கவே உணரப்படுகிறது. இதுகாறும்,  உயிர்க்குலம் யாவற்றிற்குமான உணவையும், உடல் நலனையும், சுற்றுச்சூழற் பாதுகாப்பினையும் இடையறாமல் போற்றிவரும் வனங்களின் பலதிறப்பட்ட மாண்புகளும், அவை ஆற்றும் பொறுப்புகளும் மக்களிடத்தே விரிவான பாராட்டினை பெற்றிருக்கவில்லை. ஏனெனில், வன அறிவியல் நூல்கள் மிகுதியும் ஆங்கில மொழியிலேயே இருப்பதுதான். நமது ஊர் மக்கள் இந்நூலைப் படித்து வனங்கள் நமது வாழ்வில் ஆற்றிவரும் தொண்டினைப் பாராட்ட ஏதுவாக முனைவர் சண்முகசுந்தரம் அவர்கள் மிகச் சரியான நேரத்தில் மிக இன்றியமையாத இந்நூலைப் தமிழில் படைத்துள்ளார்.

நமது முன்னோர்கள் வனத்தினுடைய இன்றியமையாமையை அறிந்திருந்தனர். அதனால்தான் வனங்களுக்கு ஓர் உயரிய ஆன்மீக மதிப்பைக் கொடுத்திருந்தனர். உண்மையில், ஒவ்வொருவரும் தனது வாழ்நாளின் பிற்பகுதியை வனத்தில் செலவிடவேண்டும் என்றும் அப்போதுதான் இயற்கையுடன் நெருங்கவும் அவற்றின் படைப்புகளான பூவினங்களையும் மாவினங்களையும் கண்டு போற்றவும், வியக்கவும் இயலும் என்று அவர்கள் ஆலோசனை வழங்கினர்.          

1990 ஆம் ஆண்டு கயானாவில் ‘இவோக்ரமா உலகளாவிய மழைச் சோலைப் பாதுகாப்பு மற்றும் நிலையான மேலாண்மை திட்டம்’ ஒன்றை நான் வடிவமைத்துக் கொண்டிருந்தபோது, நம் முன்னோர்கள் போற்றிய அதே பாரம்பரிய அறிவுடைமையைப் போற்றும் வகையில் அங்கே வனங்களில் வாழ்கின்ற அமெரிந்தியர்கள் என்பாரும் கீழ்க்கண்ட பாடலை இசைப்பதை வழக்கமாகக் கொண்டிருப்பதைக் கண்டேன்.  

வானத்தை மரங்களன்றோ தாங்கிப் பிடிக்கின்றன.  

வனங்கள் மறைந்தால்

உலகத்தின் கூரை, வானம் இடிந்து வீழும்

அப்போது

இயற்கையும் மனிதனும் இணைந்தே வீழ்வர்.   

வனம்வாழ் மக்களின் இந்த பாரம்பரியப் பாடலில் பொதிந்துள்ள, நம் முன்னோர்கள் போற்றிய அதே பாரம்பரிய அறிவுடைமையை நாம் மீட்டெடுத்து அதற்குப் புத்துயிர் வழங்க வேண்டும். அந்த வகையில் இந்த நூல் மிகவும் இன்றியமையாத ஒன்றாகும்.

இந்நூலின்கண், மாணவர்களுக்கும் வன ஆர்வலர்களுக்கும் உதவும் வகையில் 822 வன மரங்கள் செடிகளின் பெயர்கள் ஆங்கிலத்திலும் தமிழிலும் வழங்கப்பட்டுள்ளன. அப்பெயர்களைக் கொண்டு வன மரங்கள் செடிகளை அடையாளம் காணவும் அவற்றைப் பாதுகாக்கவும் இந்நூல் உதவியாக இருக்கும். இந்நூல் பெருமளவில் மக்கள் பலராலும் படிக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட வேண்டும் என விழைகிறேன். 

முனைவர் சண்முகசுந்தரம் அவர்களின் இப்பணிக்காக நாம் அனைவரும் அவருக்கு என்றென்றும் நன்றிக் கடன்பட்டுள்ளோம்.

- எம் எஸ். சுவாமிநாதன் ( மாநிலங்களவை உறுப்பினர் )

நூல் அறிமுகம்

இந்த நூல் வனங்கள் பற்றிய அறிவியல் விவரங்களைப் பொதுப்படவும் நிலைத்திணைகளின் விவரங்களைச் சிறப்பாகவும் வழங்குவதை முதல் நோக்கமாகக் கொண்டுள்ளது.     

வனங்கள் பற்றி தமிழில் எழுதப்பட்ட ஒரு நல்ல புத்தகம் இல்லை என்ற ஆதங்கத்தை பலரிடத்தும் கேள்வியுற்று, அதனால் உந்தப்பட்டு இந்த நூலை எழுதத் தொடங்கினேன். எழுதப்படும் நூல் முழுதும் பாமரத்தனமாகவும் இருக்கக் கூடாதுஇ அதே நேரத்தில் தீவிர அறிவியல்தனமாகவும் இருக்கக் கூடாது என்ற என் மனக் கட்டளைக்கு அடிபணிந்து இந்நூலை எழுதி முடித்தேன். இரண்டு சாராரின் எல்லைகள் எவை என்ற நிர்ணயம் இல்லாத காரணத்தால் நூலில் சொல்லப்படும் விவரங்களும் விளக்கங்களும் சற்று முன்னும் பின்னுமாக இருக்க நேர்ந்துள்ளன. அதாவதுஇ விவரங்களையும் விளக்கங்களையும் புரிந்து கொள்வதில் வனயியலார்க்கு (கூடவே தாவரயியலார்க்கும்) அவை மிகச் சாதாரணமாகவும் பாமரர்களுக்கு மிகக் கடினமாகவும் தெரிய நேரலாம். வாசகர்கள் பொறுத்தருள வேண்டுகிறேன்.

அறிவியல் சிந்தனைகளை ஆங்கில மொழிவழியாகவே கற்று வரும் தமிழர்கள் ஆங்கில மரபுச் சொற்களையே தெரிந்து வைத்திருக்கிறார்கள். அறிவியல் சுட்டும் அதே சிந்தனைகளையும்இ பொருள்களையும் கருத்துகளையும் விளக்கவல்ல நல்ல தமிழ்ச் சொற்களை தமிழர்கள் தெரிந்து கொண்டிருக்கவில்லை. தமிழ்மொழியின் திறம் பற்றிய சரியான அறிமுகம் அவர்களுக்கு வழங்கப்படாமையே அதற்குக் காரணமாகும். இந்த நூலின் வாயிலாக ஆங்காங்கே ஆங்கிலச் சொற்களைவிடவும் சிறப்பாகப் பொருந்தவல்ல நல்ல அறிவியல் சொற்கள் புழக்கத்திற்கு விடப்படுகின்றன. வாசகர்கள் தமிழ்மொழிக்கு ஆதரவாக அச்சொற்களை ஏற்று தாமும் தங்கள் வழக்கில் அவைகளைப் புழங்க வேண்டப்படுகிறார்கள்.

வனம் குறித்த தமிழ்ச் சொற்கள் ஏராளம். அடவி, இறும்பு, கடம், கட்சி, காடு, கானகம், கானல், கான், சோலை, பழுவம், புறவு, பொதும்பு, பொழில், என ஏறக்குறைய 25 சொற்கள் உள்ளன. அவை யாவும் ஒருபொருட் பன்மொழி (அதாவது ஒரே பொருளைத் தரும் பல சொற்கள்) என்று அறியப்பட்டாலும் மொழி வல்லுநர்கள் பார்வையில் ஒவ்வொரு சொல்லும் ஏதோ ஒரு விதத்தில் மற்ற சொற்களிடமிருந்து வேறுபட்டதாகவே கருதப்படுகிறது. இந்தக் கருத்து எல்லா ஒருபொருட் பன்மொழி சொற்களுக்கும் பொருந்தும். அறிவியல் பார்வையில் வனங்கள் பல வகைகளாக அடையாளங் காணப்படுகின்றன. வேறுபடும் வனங்களின் வகைகளுக்குத் தனித்தனியாகப் பெயரிட வேண்டியுள்ளது. எனவே வனம் குறித்த தமிழ்ச் சொற்கள் ஒவ்வொன்றிற்கும் கருத்து வரையறை செய்யும் முயற்சியாக வனம் என்ற சொல் பொதுச் சொல்லாகவும், மற்றவை வனங்களின் வகையினைக் குறிக்கும் சிறப்புச் சொல்லாகவும் இந்நூல் அறிமுகப்படுத்துகிறது.

காடு என்ற தமிழ்ச் சொல்லுக்கு ஊருக்குப் புறத்தே உள்ள நிலப்பகுதி என்பதே முதற் பொருள். அதன் அடிப்படையில் வயற்காடு, இடுகாடு, சுடுகாடு போன்ற சொற்கள் புழக்கத்தில் உள்ளன. புறம்போக்கு என்னும் சொல்லும் இந்தக் கருத்தின் அடிப்படையில்தான் பிறந்தது. வனம் என்பதற்கான ஆங்கிலச்சொல் 'Forests' என்பதாகும். இச்சொல் இலத்தீன் மொழியின் 'Foris' என்ற வேரிலிருந்து பிறந்துள்ளது. 'Foris' என்பதற்கும் 'புறத்தே' என்பதே பொருள். 'Foris’  'புறத்தே' சொற்கள் இரண்டிற்கும் உள்ள ஒலி ஒற்றுமை கவனிக்கத் தக்கது.

பசிய உயிரினத்தைப் பொதுப்படக் குறிக்க ஒரு சொல் தேவைப்படுகிறது. ஆங்கில மொழியில் ‘Plant’ என்ற சொல் கையாளப்படுகிறது. ஆங்கில மொழியிலிருந்துதான் அறிவியல் சிந்தனைகள் இறக்குமதியாக வேண்டும் என்ற மனநிலைக்கு பலரும் ஆட்பட்டுவிட்டதால் ‘Plant’ என்ற சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லைத் தேடவேண்டியுள்ளது. (தமிழர் மரபிலிருந்தே யாதொரு அறிவியல் சிந்தனையையும் தொடங்க வேண்டும், அந்தத் தொடக்கத்திலிருந்து இதுகாறும் உலகத்தில் பெறப்பட்ட சிந்தனை வளர்ச்சிகளை தமிழர் நலனுக்கு ஏற்ப அறிவியலை வார்த்தெடுக்க வேண்டும் என்ற மனநிலை அறிவியல்துறை சார்ந்தோருக்கு இருக்குமானால் இந்தத் தேடல் தேவையற்றதாகிவிடும்). நாம் தேடும் அந்தச் சொல் எதுவாக இருக்கிறது அல்லது எதுவாக இருக்கவேண்டும் என்பதில் பலதரப்பட்ட கருத்துகள் பரிமாறப்படுகின்றன.

பசிய உயிரினத்தை ஓரறிவுடைவை என தொல்காப்பியம் சுட்டுகிறது. அதைத் தொடர்ந்து புல் என்றும் மரன் என்றும் அவற்றின் இரண்டு எடுத்துக்காட்டுகளைச் சுட்டுகிறது. இவையே பசிய உயிரினத்தைச் சுட்டுகின்ற சொற்களாக முதன்முதலில் நமக்குக் கிடைக்கினறன. ஆகஇ பசிய உயிரினத்தைச் சுட்டுகின்ற பொதுச் சொல் தமிழில் இல்லை என ஆகிறது. ஆங்கில மொழியில் இருக்கிறது எனக் கொள்ளலாமா? ஆங்கில மொழியிலும் இல்லை என்பதே உண்மை. ஆங்கில ‘Plant’ என்ற சொல் மரங்கள் செடிகள் அல்லாத மற்றவற்றை மட்டுமே சுட்டுகின்ற சொல்லாகும். தமிழில் புல், பூடு என்று சொல்லப்படுபவைகளைச் சுட்டுகின்ற சொல்தான் ‘Plant’ என்பதும் ஆகும்.

ஆயினும், இந்த உண்மையை மறந்து (மறைத்து) ‘Plant’ என்பது ஒரு பொதுச் சொல் என்ற கருத்துடன் அதற்கு இணையெனச் சொல்லி ஒரு வடமொழி வேர்ச்சொல்லிலிருந்து தாவரம் என்னும் சொல் உருவாக்கப்பட்டுள்ளது. இன்றைய காலகட்டத்தில் ஆங்கில மொழி எந்த அளவுக்கு தமிழர்தம் வாழ்க்கையில் ஊடாடி நிற்கிறதோ, அந்த அளவுக்கு முந்தைய காலகட்டத்தில் வடமொழி ஊடாடி நின்றது. இன்று ஆங்கிலத்தின் சார்பாக நின்று வாதிடுவோர் போலவே அன்றும் வடமொழி சார்பாக வாதிடுவோர் இருந்தனர். இன்று ஆங்கிலத்தின் சார்பாக நின்று வாதிடுவோரின் செல்வாக்கு உயர்வாக இருப்பதைப் போலவே அன்றும் வடமொழி சார்பாக வாதிடுவோரின் செல்வாக்கு உயர்ந்திருந்தது. அதனால் தாவரம் என்ற சொல் புழக்கத்திற்கு வந்தது. அதுவே நெடுநாட்களாக புழக்கத்தினாலும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

தாவரம் என்ற சொல்தாவர என்ற வடமொழி வேர்ச் சொல்லிலிருந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது. தாவர என்ற சொல்லுக்கு ‘அசையாத’ என்று பொருள். சரியாகச் சொன்னால் அச்சொல் உயிரற்ற அசையாத பொருள்களையே சுட்டும். உயிருள்ள பசிய இனத்தைதாவர என்னும் அடியாகப் பிறக்கும் தாவரம் என்னும் சொல் பொருத்தமற்றதும் கருத்துப் பிழையுடையதும் ஆகும். தாவர என்னும் வட மொழிச் சொல்லை விடவும் நிலைத்திணை என்னும் தமிழ்ச் சொல் மிகப் பொருத்தமானது என்று தமிழறிஞர்கள் பலர் கருதுகிறார்கள். அவர்களின் கருத்தை ஏற்று இந்நூல் நிலைத்திணை என்ற சொல்லையே கையாள்கிறது. 

தமிழ் மொழி வேர்ச் சொற்களிலிருந்து உருவாகிய நல்ல சொற்கள் இன்னும் பல உள்ளன. அவற்றுள் சில.

 ‘பை’ (பசுமை) என்னும் வேரின் அடியாகப் பிறந்தவை பைது, பைத்து, பையல், பைங்கூழ் பைங்கால் ஆகிய சொற்களாகும். கிரேக்க வேர்ச் சொல்லாகிய ‘phyte’ என்பதும் ஆங்கில ‘Plant’ என்பதையே குறிக்கிறது. அடிப்படையில் கிரேக்கத்தின் ‘phyte’ என்ற சொல்லும், தமிழின் பைது பைத்து என்பவையும் ஒரே பொருளைத் தருவனவாகும். ‘phyte’ பைது பைத்து ஆகியவற்றின் ஒலி ஒற்றுமையும் கருதத் தக்கது. நிலைத்திணை அறிவியலில் ‘phyte’ என்பதிலிருந்து Pteridophyte, Chlorophyte, Mesophyte என ஏராளமான தொகைச்சொற்கள் பெறப்பட்டுள்ளன.

‘பை’ (பசுமை) என்னும் வேரின் அடியாகப் பிறந்த ‘பைதிரம்’ என்னும் சொல், நாடு என்னும் பொருந்தி வராத பொருள் கொண்டதாக தமிழ் அகராதிகள் சுட்டுகின்றன. ஆங்கில ‘flora’ என்னும் சொல்லுக்கு பைதிரம் என்ற சொல்லை இணையெனக் கொள்ளலாம். தொல்காப்பியம் கூறும் உரிப்பொருள் பட்டியலில் வரும் மா (புள்ளும் மாவும்) விலங்கினைச் சுட்டுவதால் ஆங்கில ‘fauna’ என்னும் சொல்லுக்கு ‘மாதிரம்’ என்ற சொல்லை இணையெனக் கொள்ளலாம். ‘மாதிரம்’ என்ற சொல்லுக்கும் வானம் திசை மலை நிலம் மண்டிலம் என்னும் பொருந்தி வராத பொருள் கொண்டதாக தமிழ் அகராதிகள் சுட்டுகின்றன. அவை யாவற்றையும் இயற்பொருள் எனக் கொண்டு ‘மாதிரம்’ என்பதை உயிர் அறிவியல் மரபுச் சொல்லாக ‘fauna’ என்பதற்கு இணையெனக் கொள்ளலாம். பைதிரத்தையும் மாதிரத்தையும் ஏற்க விரும்பாத ஆப்த வாக்கிய பக்தர்களுக்கு பூக்கணம் மாக்கணம் என்னும் சொற்களைப் பரிந்துரைக்கலாம்.

‘பை’ (பசுமை) என்னும் வேரின் அடியாக வைத்து பைந்திணை பையல் பைங்கூழ் பைங்கால் ஆகிய சொற்களையும், தாவரம் என்னும் சொல்லுக்கு மாற்றாகக் கொண்டால் பிழை ஏதும் இல்லை என்றே கருதலாம்.

பைஞ்ஞிலம் என்ற தமிழ்ச்சொல் ஒன்று உண்டு. அதற்கு மக்கட்பரப்பு என்று அகராதிகள் பொருள் விளக்கம் தருகின்றன. மன்பதை என்ற மற்றொரு தமிழ்ச்சொல் உண்டு. அதற்கும் மக்கட்பரப்பு என்று அவை பொருள் விளக்கம் தருகின்றன. ‘பை’ (பசுமை) என்னும் வேரின் அடியாகப் பிறக்கும் பைஞ்ஞிலம் என்ற சொல்லுக்கு நிலைத்திணைப் பரப்பு என்னும் பொருளே ஏற்புடையதாக இருக்கும் எனக் கூறி, அதை தமிழறிஞர்களின் கருத்துக்கு விடுகிறோம்.

தொல்காப்பியம், மரன் என்னும் சொல்லை புல்லைத் தவிர்த்து மற்ற பசிய உயிரினங்களான செடி கொடி பூடு ஆகியவற்றைச் சுட்டும் பொதுச் சொல்லாகவும் கூடவே இன்றைய கருத்தில் உள்ள மரத்தைச் சுட்டும் சிறப்புச் சொல்லாகவும் கையாளுகிறது. எனவே மரம் மரன் என்னும் இரண்டு சொற்களையும் சிறப்புச் சொற்களாகவே கொள்ளுதல் நலம்.

பயிர் என்னும் நல்ல சொல்இ சாகுபடிக்கு உள்ளாகும் நிலைத்திணைக்குச் சிறப்புச் சொல்லாகிப் போனது. எனவே தாவரம் என்னும் சொல்லுக்கு மாற்றாக பயிர் என்னும் சொல்லைக் கொள்ள முடியாது.

நிலைத்திணை பைந்திணை போன்றே பல புதிய சொற்கள் அறிவியல் மரபுச் சொற்களாக இந்நூலுக்குள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் ஏராளமான நிலைத்திணைத் தமிழ்ப் பெயர்கள் இந்த நூலின்கண் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றின் ஆங்கிலப் பெயர்களும் தெரிந்திருப்பது அறிவியல் மேற்படிப்பிற்குப் பயனளிக்கும் என்பதைக் கருதி, தமிழ்ப் பெயர்களுக்குரிய ஆங்கில வழி அறிவியல் மரபுப் பெயர்கள் நூலின் பின்னிணைப்பாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

பொதுவாக, வனங்களுடன் முறையான அறிமுகம் இல்லாத மக்கள் மனத்தில் வனம் என்றால் அது ஒரு அச்சம் தரும் இடம் என்று பதிவாகியிருக்கிறது. இந்த அச்ச உணர்வு நகர்ப்புறத்து மக்களிடம் நன்கு படித்தவர்கள் படிக்காதவர்கள் என்ற வேறுபாடு இல்லாமல் எல்லோருடைய மனத்திலும் இயல்பாக அமைந்துள்ளது. அவர்களது அச்சத்திற்கு முதற் காரணம் காட்டில் வாழும் விலங்குகள் தாம். வனங்களில் வாழும் விலங்குகள்இ காட்டிற்குள் செல்லும் மாந்தர்களைத் தாக்கும் கொ^ரத் தன்மையைக் கொண்டவை என்ற கற்பனையில் அவர்கள் இருக்கிறார்கள். "கொடிய வன விலங்குகள்" என்ற சொற்றொடரை மிகச் சாதாரணமாகப் பயன்படுத்தும் எழுத்தாளர்கள் பலர்.

அடுத்து, வனம் என்றால் அது ஒரு ஒழுங்கு இல்லாத மரம் செடி கொடிகளின் கூட்டம் என்ற மற்றொரு கருத்தும் அவர்கள் மனதில் பதிவாகியிருக்கிறது. மக்கள் கூட்டம் எப்படி ஒரு சமுதாயமாக உறவு. சுற்றம் நட்பு பகை ஏதிலார் விருந்தினர் போன்ற தொடர்புகளைக் கடைப்பிடித்துச் செயல்படுகிறதோ, அதைப் போலவே நிலைத்திணைக் கூட்டமும் ஒரு சமுதாயமாக பல வழிமுறைகளைக் கடைப்பிடித்து ஒழுக்கமாக வாழ்கிறது. இரண்டிற்கும் உள்ள அடிப்படை வேறுபாடு என்னவெனில் மக்கள் சமுதாயத்தின் நடைமுறைகள் மக்களால் வகுக்கப்பட்டவை. வனச் சமுதாயத்தின் நடைமுறைகள் இயற்கையால் வகுக்கப்பட்டவை. இந்த உண்மைகள் இந்நூலைப் படிப்பதின் வாயிலாகத் தெரியவரும்.

வனங்களுக்குச் செல்லும்போது விலங்குகளிடமிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள துப்பாக்கி எடுத்துக்கொண்டுதானே செல்வீர்கள் என்று என்னிடம் கேட்கும் மெத்தப் படித்தவர்களும் பாமரர்களும் பலர். இன்னும் இவை போன்ற நம்பிக்கையின் பாற்பட்ட பல்வேறு வினாக்களையும், அதற்கான உண்மை விவரங்களையும் ஒரு தனிக் கட்டுரையாக வழங்கியிருக்கிறேன். அதை நூலின் பின்னிணைப்பில் காணலாம்.

மக்களில் பெரும்பாலோரிடத்தில் வனங்களைப் பற்றி மேற்கண்ட அடிப்படையில்லாத கற்பனைகளும் நம்பிக்கைகளும் ஏற்பட்டதிற்கு வனங்களின் அறிமுகம் அவர்களுக்கு கிடைக்காமையே முதன்மைக் காரணமாகும். வனங்கள் என்றில்லாமல் இயற்கையைப் பற்றிய சரியான அறிமுகத்தை பள்ளிப் பாடங்களும் வழங்கவில்லை. இந்த நிலையில் மக்கள் தாமாகவே கற்பித்துக்கொண்ட நம்பிக்கைகளை மனத்தில் பதிவு செய்துகொள்கிறார்கள். அதனால் இயற்கையை அவர்கள் மதிப்பதில்லை. இயற்கையினின்றும் ஒதுங்கி, முடிந்தால் கூடியமட்டும் மாறுபட்டு வாழும் வாழ்க்கையைக் கடைப்பிடிக்கிறார்கள். இந்தப் போக்கு மனித குலத்திற்கே மிகவும் ஆபத்தானது என்ற உண்மையை மக்களுக்கு எவரும் உணர்த்தவும் இல்லை, உணர்த்தும் காரியத்தைச் செய்ய நல்ல நிறுவனங்களும் இல்லை. இந்தப் பின்னணியில் வனங்களை மக்களுக்கு அறிமுகப்படுத்தும் ஒரு எளிய முயற்சியாகவும் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.

 

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan