இயற்கைதான் ஆதிமனிதனின் முதல் தெய்வமாக இருந்தது. சூரியினையும் மழையையும் உலகெங்கும் தெய்வமாக மக்கள் ஏற்றார்கள். இப்படி தங்கள் வாழ்க்கைக்குப் பயனுள்ளதாக இருக்கும் தாவரங்களையும் வழிபடும் வழக்கம் நம் மண்ணில் இருந்திருக்கிறது. சங்க இலக்கியங்களில் இதுபற்றி ஏராளமான பாடல்கள் உண்டு.
தாவரங்கள் இயற்கையாகவே தெய்வீகத் தன்மை பொருந்தியவையாக இருக்கின்றன. மாசு மருவற்ற இறைவனுடன் தாவரங்களைத் தொடர்புபடுத்தி வணங்குவது நமது வழக்கமாக இருக்கிறது. கோயில்களில் தலவிருட்சங்கள் காண்கிறோம். வீட்டுக்குள் துளசிச் செடி வைப்பதும் நம் மரபு. நோய்களைக் கட்டுப்படுத்தி, ஆரோக்கியத்தையும் சுற்றுச்சூழலையும் மேம்படுத்துபவை தாவரங்களே. அம்மை நோய்க்கு வேப்பிலை சாற்றுவதும் இயற்கை சிகிச்சை முறைதான். மஞ்சள் காமாலை நோய்க்கு மருந்தும் இத்தாவரங்களே. பிரபஞ்சத்தின் நவக்கிரகங்களுக்கும் தாவரங்களுக்கும் உள்ள தொடர்பு பற்றி விளக்குவதோடு, அவற்றின் ஆங்கிலப் பெயர்களோடு அரிய தகவல்களையும் இடம்பெறச் செய்திருக்கும் பயனுள்ள நூல். பன்ருட்டி நகராட்சித் தலைவராக இருந்து, வெளிப்படையான நிர்வாகத்தின் மூலம் ஊழலை ஒழிக்க முயற்சி எடுத்த பஞ்சவர்ணம் இந்நூலை எழுதியிருக்கிறார்