தமிழிசை என்பது என்ன?
திருமுறைகளும், திருப்பாசுரங்களும் பாடுவது மட்டுமே தமிழிசை என்றொரு கருத்துப் பலருக்கு உண்டு. கீதம், கிருதி, கீர்த்தனை, பதம், பாடுவது அதாவது அரங்கிசை என்ற செவ்விசை ; எடுப்பு ; தொடுப்பு, முடிப்புடன் ( பல்லவி, அனுபல்லவி, சரணம் ) பாடுவது தமிழிசை அல்ல என்று சொல்கிறவர்களும் உண்டு.
அப்படியென்றால் அரங்கிசை என்ற செவ்விசை தமிழிசை இல்லையா? தியாகராசரின் தெலுங்குக் கீர்த்தனைகளின் 'சாகித்தியம்' என்ற பாடல் தெலுங்கு மொழியில் இருந்தாலும் அதன் இசை தமிழிசையே. தஞ்சை அரண்மனை வீணைக் கலைஞராகத் திகழ்ந்த க்காளகஸ்தி ஐயர், அவர் மகள் சீதம்மா, அவர் மகன் தியாகராசர் என வழிவழியாக வந்த தமிழ் மரபு இசையே அது.
'பாரமல் பார்த்த நெஞ்சம் ஜம், சசச்சம் ஜம் சசச்சம்' என்ற பாடல் மெட்டும் ஒலிக்கிறது இது இரவல் அல்லவா? என்ற கேள்வி நம் மனிதில் எழலாம்.
கலை என்பதே போலச் செய்தல்தான், அதில் இரவல் என்பது தவறே அல்ல. நகல் எடுப்பதுதான் தவறு. புகழ்பெற்ற பாடல்களின் மெட்டுக்களைப் பாரதியே தன்பாடலுக்குப் பயன்படுத்தியிருக்கிறார். மக்கள் அறிந்த, மக்களுக்குப் பிடித்த மெட்டில் பாடல்களைத் தருவது இசையமைப்பாளரின் கடமையுங் கூட. இதிலிருந்து நாம் அறியவேண்டியது, பாடல் தமிழாக இருந்தாலும் இசை மேலை இசை ; அதுபோல பாடல் தெலுங்கில் இருந்தாலும் அதன் இசை தமிழிசையே.
தமிழ் இசை பல்வேறு வகைமையுடையது ; நாட்டார் இசை, நாடக இசை, நாட்டிய இசை, பக்தி இசை, அரங்கிசை, செவ்விசை, இரங்கல் பாட்டு, மல்கலப்பாட்டு, மெல்லிசை, திரை இசை என்று அதன் வகைமைகள் பிரிந்து கொண்டே செல்லும். இந்த வகைமைகளும் பல்வேறு பிரிவுகளால் பெருகியுள்ளன.
இப்படி தமிழிசையின் வரலாற்றையும், நம்மவர்கள் உருவாக்கிய இசைக் கருவிகள் பற்றியும் சிலாகித்து எழுதியுருக்கிறார் ந.மம்மது. 'இழை இழையாய் இசைத்தமிழாய்' என்ற இந்த நூல் தமிழர்களின் ஆடற் கலைகள் பற்றியும் பேசுகிறது. வேலன் வெறியாடல், தேர்க்குரவை, குரவைச் சிந்து, கும்மி, கோலாட்டம், நையாண்டி மேளம், வள்ளைப்படாடு, நடவுப் பாட்டு என இந்தத்தலைமுறை இழந்ததுதான் எத்தனை?
நாதத்தின் தலைவானாக இறைவனை அடையாளப்படுத்தியது தமிழ்ச்சமூகம். அந்த இறைவனை நடராஜன் என்று போற்றியும் வணங்கியும் வந்திருக்கிறது. இப்போது திரை இசைப் பாடல்களும் ஆடல்களுமே தமிழிசை என்று சுருங்கிப் போயிருக்கிறது நம் பண்பாடு. தொலைந்த இசையின் தமிழின் வரலாற்றை சொல்லும் இந்த நூல், போற்றிப் பாதுகாக்க வேண்டிய படைப்பு.
- - தினகரன் வசந்தம் 2008.12.07 - - -