கவிஞர் இரா.இரவியின் இலக்கியப் பயணத்தில் இது எட்டாவது மைல் கல் என்று அவரே தன் முன்னுரையில் குறிப்பிடுகிறார். அவருடைய இணையதளமான 'கவிமலர் டாட் காம்' -ல் பார்த்த இலட்சக்கணக்கான வாசகர்கள் பாராட்டிய கவிதைகளே இவை என்பது இன்னும் சிறப்பு. வித்தகக் கவிஞர் பா.விஜய் மற்றும் தமிழறிஞர் தமிழண்ணல் ஆகியோரின் அற்புதமான அணிந்துரைகள் இந்நூலினை மேலும் மெருகூட்டுகின்றன. 'ஹைக்கூவின் மறுபெயர்தான் இரவி' என்ற தமிழண்ணலின் பாரட்டுக்கு முற்றிலும் பொருத்தமானவர் தான் இந்நூலாசிரியர்.
தனது முதல் கவிதை குறளுக்கு அர்ப்பணம், தொடர்ந்து பாரதி (குடும்ப அட்டையில் 'எச்' முத்திரை குத்தியிருக்கமாட்டான், ஏன் தெரியுமா? / இன்றும் அவனது வருமானம் / அய்யாயிரத்திற்கும் கீழ்தான் இருந்திருக்கும். - பக்கம் 14 ) அப்புறம், பாரதிதாசன், நேதாஜி, காமராஜர், தெரசா என்று ... கவிதைத் தோரணம் நீளுகிறது. கலாம் அறிவுக்குச் சலாம் போடும் கவிதைப் புநையல்களில் மூழ்கிக் குளிக்கலாம். (கடுகு அளவும் கவலை நாளும் கொள்ளாதவரே - பக்.34 ) அவரது குடும்பத்தின் மக்களையும் கவிதைச் சாரலுக்குள் நனையவிட்டிருக்கிறார். எளிய நடையில், பொலிவான வடிவமைப்பு, மனதில் நெருப்பு உள்ள (நன்றி - பா.விஜய்) கவிஞர் இரா.இரவி இப்படைப்பின் மூலம் வாசகர்களைச் சுட்டு விடுகிறார்
- - - ஜனவரி - பிப்ரவரி - மார்ச் 2008 - - - -