கவிஞர் இரா. இரவி மதுரை திருமலை நாயக்கர் அரண்மனையில் சுற்றுலாத் துறையில் பணி புரிந்து வருகிறார். 26-01-92 குடியரசு தின விழாவில் சிறந்த அரசுப் பணியாளர்களுக்கான விருதினை மாவட்ட ஆட்சித் தலைவரிடமிருந்து பெற்றுள்ளார். இலண்டன் சுடரொளி வெளியீட்டுக் கழகம் உலக அளவில் நடத்திய இரண்டு கவிதைப் போட்டிகளிலும் வென்று பரிசு பெற்றுள்ளார். பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு பரிசும், பாராட்டு சான்றிதழும் பெற்றுள்ளார். இவர் "கவிதைச் சாரல்" "ஹைக்கூ கவிதைகள்" "விழிகளில் ஹைக்கூ" "உள்ளத்தில் ஹைக்கூ" "என்னவள்" "நெஞ்சத்தில் ஹைக்கூ" என 6 நூல்கள் வெளியிட்டுள்ளார். இவரது கவிதைகள் முழுவதையும் www. kavimalar.com (கவிமலர் டாட் காம்) என்ற இணையதளத்தில் பதிப்பித்து உள்ளார். இந்த இணையத்தில் கவிதைகள், ஹைக்கூ கவிதைகள், நகைச்சுவை துணுக்குகள், இலக்கிய விழா புகைப்படங்கள், விருந்தினர் புத்தகம், ஆங்கிலத்தில் ஹைக்கூ கவிதைகள் என பல்வேறு பகுதிகள் உள்ளன. உலகம் முழுவதும் 55,000 பேருக்கு மேல் பார்த்துப் பாராட்டி உள்ளனர். இவரது ஹைக்கூ கவிதைகள் திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் பாட நூலில் இடம் பெற்றுள்ளது. சிறந்த நூலிற்கான பரிசினை புதுவை துணைவேந்தரிடமிருந்து பெற்றுள்ளார். இவரது 100க்கு மேற்பட்ட ஹைக்கூ கவிதைகளை விஞ்ஞானி நெல்லை சு. முத்து "புத்தாயிரம்'' "தமிழ் ஹைக்கூ'' என்ற நூலில் மேற்கோள் காட்டி உள்ளார். இணையத்தள கவிதைகளை சென்னை இலயோலா கல்லூரி மாணவர் திரு. இரவிக்குமார் ஆய்வு செய்து ஆய்வேடு சமர்ப்பித்துள்ளார். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அறிவியல் தமிழ்த்துறை மாணவர் திரு. அன்பு ஷிவா கவிதைகளை ஆய்வு செய்து வருகிறார். தமிழ்த்துறை மாணவர்களும் தமிழ் ஆர்வலர்களும் கண்டுகளிக்கக் கூடிய ஒப்பற்ற இணையதளமாக கவிமலர் டாட் காம் உள்ளது. பிரபல இணையதளங்களான யாகூ, கூகிள் இலவச இணைப்பு வழங்கி உள்ளன. என்சைக்ளோபீடியாவில் கவிமலர் டாட் காம் பற்றிய கட்டுரை இடம் பெற்றுள்ளது. உலகம் முழுவதும் பரந்து வாழும் தமிழ் நெஞ்சங்கள் தினந்தோறும் கவிமலர் டாட் காம் இணையதளத்தை பார்த்து ரசித்து பாராட்டு வருகின்றனர். குடியரசு தலைவர் மேதகு. அப்துல் கலாம் அவர்கள் திருச்சி வந்திருந்த போது அரசு விருந்தினர் மாளிகையில் 29-06-2005 அன்று நேரில் சந்தித்து அவரின் பாராட்டையும் பெற்றுள்ளார்.