சமகால வரலாற்றை சமரசமில்லாமல் பதிவு செய்யும் முயற்சிகள் தமிழில் குறைவு; அனேகமாக இல்லை என்றே சொல்லிவிடலாம். பொதுவாகவே தமிழர்கள் வரலாற்று பிரக்ஞை அதிகம் இல்லாமலே வாழ்ந்து வருகின்றார்களோ என்றுகூட தோன்றுகிறது. சுதந்திரப் போராட்ட காலம், அதை அடுத்து திராவிட இயக்கத்தின் எழுச்சி என அரசியலைப் புரட்டிப்போட்ட நிகழ்வுகள் பற்றிக்கூட முழுமையான, நேர்மையான தொகுப்புக்கள் தமிழில் கிடையாது. அந்தத்தலைமுறையினர் படித்ததோடு முடிந்துவிட்டது.
பத்திரிகையாளர் ப.திருமா வேலன் எழுதியிருக்கும் மூன்று புத்தகங்கள் இந்த வரலாற்றுக் குறையைப் போக்க உதவலாம். 'தடை செய்யப்பட்ட தமிழ் எழுத்தும் காலமும்' என்ற வரிசையில் வெளியாகி இருக்கும் இந்த முதல் மூன்று புத்தகங்கள் பிரிட்டிஷ் ஆட்சியின்போதும், சுதந்திரத்திற்குப் பின் வந்த காங்கிரஸ் ஆட்சியின்போதும் தடை செய்யப்பட்ட எழுத்துக்களையும் அதன் பின்னணியையும் விளக்குகின்றன.
காந்தி இருந்தவரை அவரை அதி தீவிரமாக எதிர்த்து வந்த பெரியார், மதவாதிகளால் காந்தி கொலை செய்யப்பட்ட தகவல் தெரிந்ததுமே மனம் மாறினார். 'இருந்தது ஆரிய காந்தி; இறந்தது நம் காந்தியார்' என்று சொல்ல ஆரம்பித்தார். நாடு முழுவதும் காந்திக்கு இரங்கல் கூட்டங்களை நடத்தியது திராவிட இயக்கம். அந்த சமயத்தில் ஏ.வி.பி.ஆசைத்தம்பி 'காந்தியார் சாந்தியடைய...' என்ற 12 பக்க நூலை வெளியிட்டார். காந்தியை படுகொலை செய்த மதவாதிகளை காட்டமாக விமர்சித்து இருந்தார் ஆசைத்தம்பி. அந்தப்புத்தகம் தடை செய்யப்பட்டு, வழக்கு பாய்ந்தது. அந்தச் சூழலையும், காந்த காலத்து அரசியலையும் கண்முன்னே நிறுத்துகிறது மூன்றாவது புத்தகம்.
'காந்தியார் சாந்தியடைய...' புத்தகத்தை எழுதியதற்காக ஆசைத்தம்பி கைது செய்யப்பட்டார். புத்தகத்தை வெளியிட்ட திருச்சி மாவட்டம் துறையூரைச் சேர்ந்த எரிமலை பதிப்பகத்தின் கலியபெருமாள், து.ப.நாராயணன் ஆகியோரும் கூட கைது செய்யப்பட்டனர. மூன்று பேருக்கும் திருச்சி சிறையில் வலுக்கட்டாயமாக மொட்டை அடிக்கப்பட்டது. இவர்கள் மொட்டைத்தலையோடு இருந்த படம் 'திராவிட நாடு' இதழில் வெளியானது.
அப்போது ஆசைத்தம்பி திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு உறுப்பினர். இந்த விவகாரம் மாநிலம் முழுவதும் தி.மு.க வினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்த, தடை செய்யப்பட்ட ஆசைத்தம்பியின் நூலை ஆங்காங்கே பிரசுரித்து, பொது இடங்களில் வெளிப்படையாக வைத்து வெளிப்படையா விற்று, அரசாங்கத்திற்கு தங்கள் எதிர்ப்பைக் காட்டினர். கடைசியில் தமிழக காங்கிரஸ் அரசு 'ஆசைத்தம்பி உட்பட யாரையும் மொட்டை அடிக்கவில்லை' என மறுத்தது.
எப்போதும் சமாளிப்பதற்காக அரசு சார்பில் வெளியிடப்படும் மழுப்லான விளக்கமாகவே அமைத்த அது எடுபடவே இல்லை.
- - - 2008.01.24 - - -