சமகால வரலாற்றை சமரசமில்லாமல் பதிவு செய்யும் முயற்சிகள் தமிழில் குறைவு; அனேகமாக இல்லை என்றே சொல்லிவிடலாம். பொதுவாகவே தமிழர்கள் வரலாற்று பிரக்ஞை அதிகம் இல்லாமலே வாழ்ந்து வருகின்றார்களோ என்றுகூட தோன்றுகிறது. சுதந்திரப் போராட்ட காலம், அதை அடுத்து திராவிட இயக்கத்தின் எழுச்சி என அரசியலைப்
புரட்டிப்போட்ட நிகழ்வுகள் பற்றிக்கூட முழுமையான, நேர்மையான தொகுப்புக்கள் தமிழில் கிடையாது. அந்தத்தலைமுறையினர் படித்ததோடு முடிந்துவிட்டது.
பத்திரிகையாளர் ப.திருமா வேலன் எழுதியிருக்கும் மூன்று புத்தகங்கள் இந்த வரலாற்றுக் குறையைப் போக்க உதவலாம். 'தடை செய்யப்பட்ட தமிழ் எழுத்தும் காலமும்' என்ற வரிசையில் வெளியாகி இருக்கும் இந்த முதல் மூன்று புத்தகங்கள் பிரிட்டிஷ் ஆட்சியின்போதும், சுதந்திரத்திற்குப் பின் வந்த காங்கிரஸ் ஆட்சியின்போதும் தடை செய்யப்பட்ட எழுத்துக்களையும் அதன் பின்னணியையும் விளக்குகின்றன.
'காந்தி இராமசாமியும் பெரியார் இராமசாமியும்' என்ற இரண்டாவது புத்தகம் இன்னும் சுவாரஸ்யமான தொகுப்பு. இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு காங்கிரஸ் கட்சியின் சார்பில் தமிழக முதல்வராக இருந்தவர் ஓமத்தூர் ராமசாமி ரெட்டியார். சுமார் இரண்டு ஆண்டு காலம் ஆட்சி செய்த இவர் நேர்மையின் சிகரமாக இருந்தார். வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை அமல்படுத்தினார். மடங்கள், ஆதீனங்கள், கோயில்களின் சொத்துக்களை சிலர் மட்டுமே சுரண்டி வருவதைத் தடுக்க சட்டம் கொண்டுவந்தார். ஜமீன் இனாம் முறையை ஒழித்தார். ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கை
எடுத்து, நான்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு கொடுத்தார். யாருடைய சிபாரிசுக்கும் தலைவணங்க மறுத்தார். இப்படி இருந்ததால் சொந்த கட்சிக்காரர்களின் எதிப்புக்கே ஆளானார். சதியில் சிக்கி பதவியைத் துறந்து அரசியலை விட்டே ஒதுங்கியது அந்தக் குணக்குன்று.
இடையில் 1948-ம் ஆண்டு அவரை பதவியை விட்டுத் துரத்த முயற்சி நடந்தது. அப்போது காமராஜர் ஆதரவு ஓமத்தூராருக்குக் கிடைத்ததால்அந்த முயற்சி தோற்றது. காங்கிரஸ் முதல்வராக இருந்தாலும் அடித்தட்டு மக்களுக்காகப் பாடுபட்ட ஓமத்தூராரை, 'காந்தி ராமசாமி' என வர்ணித்து வந்தவர் அறிஞர் அண்ணா. அவர் அப்போது 'திராவிட நாடு' இதழில் 'காந்தி ராமசாமியும் பெரியார் ராமசாமியும்' என்ற தலையங்கத்தை எழுதினார். அரசாங்கத்தால் இது தடை செய்யப்பட, சென்னை உயர் நீதிமன்றம் வரை சென்று வழக்காடி, இந்தத் தடையை உடைத்தார் அண்ணா. இந்த
சுவாரசிய வரலாறு சுவை குன்றாமல் அப்படியே புத்தகம் ஆகியுள்ளது.
- - - 2008.01.24 - - -