சமகால வரலாற்றை சமரசமில்லாமல் பதிவு செய்யும் முயற்சிகள் தமிழில் குறைவு; அனேகமாக இல்லை என்றே சொல்லிவிடலாம். பொதுவாகவே தமிழர்கள் வரலாற்று பிரக்ஞை அதிகம் இல்லாமலே வாழ்ந்து வருகின்றார்களோ என்றுகூட தோன்றுகிறது. சுதந்திரப் போராட்ட காலம், அதை அடுத்து திராவிட இயக்கத்தின் எழுச்சி என அரசியலைப் புரட்டிப்போட்ட நிகழ்வுகள் பற்றிக்கூட முழுமையான, நேர்மையான தொகுப்புக்கள் தமிழில் கிடையாது. அந்தத்தலைமுறையினர் படித்ததோடு முடிந்துவிட்டது.
பத்திரிகையாளர் ப.திருமா வேலன் எழுதியிருக்கும் மூன்று புத்தகங்கள் இந்த வரலாற்றுக் குறையைப் போக்க உதவலாம். 'தடை செய்யப்பட்ட தமிழ் எழுத்தும் காலமும்' என்ற வரிசையில் வெளியாகி இருக்கும் இந்த முதல் மூன்று புத்தகங்கள் பிரிட்டிஷ் ஆட்சியின்போதும், சுதந்திரத்திற்குப் பின் வந்த காங்கிரஸ் ஆட்சியின்போதும் தடை செய்யப்பட்ட எழுத்துக்களையும் அதன் பின்னணியையும் விளக்குகின்றன.
'இன்றைய ஆட்சி ஏன் ஒழிய வேண்டும்?' என்ற முதல் புத்தகம் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் 'குடி அரசு' இதழில் பெரியார் எழுதிய ஒரு தலையங்கத்தையும், அது ஏற்படுத்திய எதிர்வினைகளையும் பற்றியது. சோவியத் சுற்றுப் பயணம் சென்றுவந்த பிறகு, பெரியாரை கம்யூனிச சித்தாந்தம் பெரிய அளவில் ஈர்த்தது. அது கம்யூனிஸ்ட் கட்சி இந்தியாவில் செல்வாக்குப் பெறாத காலம். கம்யூனிசத்துக்கு பெரியார் மாபெரும் பிரசாரகராக மாறிக்கொண்டிருப்பதை உணர்ந்த பிரிட்டிஷ் அரசு, அவரைத் தட்டிவைக்க நினைத்தது. 29.10.1933 'குடி அரசு' இதழில் 'இன்றைய ஆட்சி ஏன் ஒழிய வேண்டும்?' என்ற தலையங்கத்தை பெரியார் எழுதினார். ஆட்சி நிர்வாகத்தை கடுமையாகச் சாடிய தலையங்கம் அது!.
'அரசியல் நிர்வாகத்திற்கென்று குடிகளிடம் இருந்து வசூலிக்கப்படும் தொகைகள் 100க்கு 75 பாகம் அக்கிரமமான வழிகளிலேயே - பெரிதும் செல்வான்களுக்குப் பயன்படும் மாதிரியிலேயே - சிலரை செல்வான்களாக்குவதற்குமே நடைபெறுகின்றன. பாமர மக்கள் - ஏழை மக்கள் ஆகியவர்களின் உழைப்பெல்லாம் வரியாகவே சர்க்காருக்குப் போய்ச்சேர்ந்து விடுகின்றது.
பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவிற்கு வந்து சுமார் 175 வருஷகாலமாகிய பிறகும் இன்றும் கல்வித்துறையில் 100க்கு 8 பேர்களேதான் நம்மவர்கள் படிக்கத் தெரிந்தவர்களாக இருக்கிறார்கள் என்றால் அதுவும் பெரிதும் பணக்காரர்களும், மேல்ஜாதிக்காரர்களுமே என்றால், அது நிர்வாகமானது ஏழைகளுக்குப் பயன்படும் முறையில் தனது வரிப்பணத்தை செல்வு செய்து இருக்கிறது என்று சொல்ல முடியுமா?'
-இப்படி கேள்வி எழுப்பிய பெரியார் 'மொத்த ஜனத்தொகையில் 100க்கு 92 பேர்களை கையெழுத்துக்கூடப் போடத் தெரியாத தற்குறிகளாய் வைக்கப்பட்டிருக்கிறதென்றால் இந்த அக்கிரமங்களை மக்கள் எப்படித்தான் சகித்துக் கொண்டிருப்பது என்பது நமக்கு விளங்கவில்லை' என்று பொரிந்திருந்தார்.
இந்தத் தலையங்கத்திற்காக ராஜத்துவேஷக் குற்றம் சாட்டப்பட்டு பெரியாரும் 'குடி அரசு' வெளியீட்டாளர் என்ற அடிப்படையில் பெரியாரின் தங்கை எஸ்.ஆர்.கண்ணம்மாவும் கைது செய்யப்பட்டார்கள்.
சிறையிலிருந்து விடுதலையான பிறகு தனக்கு நடந்த பாரட்டு விழாவில் பெரியார் இப்படி வேடிக்கையாகச் சொன்னார்; 'ஒரு சாதாரணமானதும் சப்பையானதுமான வியாசத்திற்காகத்தான் நான் சிறைக்குப் போக நேரிட்டதே தவிர, மற்றபடி செய்யத்தக்க ஒரு சரியான காரியம் செய்துவிட்டு சிறைக்குப் போகவில்லை. சர்க்கார் இந்தக் 'குடி அரசு' பத்திரிகையின் பழைய இதழ்களைப் புரட்டிப்பார்த்தால் என்னை வருடக் கணக்காய் தண்டிக்கக் கூடியதும், நாடு கடத்தக்கூடியதுமான வியாசங்கள் நூற்றுக்கணக்காக தென்படலாம். ஆனால் அவர்கள் அந்தக் காலத்திலெல்லாம் கவனித்ததாக எனக்குத் தெரியவில்லை'
- - - 2008.01.24 - - -