புலவர் மா.கி.இரமணன் சிறந்த சீர்திருத்த சமயப் பேச்சாளர், கட்டுரையாளர்,பல்வேறு பத்திரிகைகளில் இவர் எழுதியுள்ள 25 கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். அபிராமி அந்தாதி பற்றிய "நல்லன எல்லாம் தரும்" முதல் கட்டுரையில் மனமுவந்து பிறருக்குக் கொடுப்பதும், கைவருந்தி பிறருக்காக உழைப்பதும் அபிராமியின் அருளைப் பெறும் வழிகள் என்கிறார்.
அண்ணாமலையை வலம் வருவோர் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை விளக்குகிறது அடுத்த கட்டுரை. கல்லைக் கனியாக்கும் திருவாசகக் கட்டுரையில் தொழுதால் தெய்வ அருளைப் பெறலாம் எதுவுமே தெரியாது என்றாலும் அழுதாலும் அருள் பெறலாம் என்றும், மணிவாசகரின் கருத்தை சுவைக்க வைக்கிறார். தேவாரம் பாடினால் தேவைகள் ஈடேறும், நோய் தீர்க்கும், நவக்கிரக தோஷம் நீங்கும் என்ற செய்திகளை "துயர் போக்கும் தேவாரம்" கட்டுரை விளக்குகிறது.
ஒட்டக்கூத்தர் கட்டிய சரஸ்வதி கோவில், சிவபிரானின் எட்டு வீரச் செயல்களை விளக்கும் அஷ்ட வீரட்ட தலங்கள், திருவெற்றியூர் தெட்சிணாமூர்த்தி ஆலயம், பௌர்ணமி அன்று தரிசிக்க வேண்டிய மூன்று சக்தி திருக்கோவில்கள், சென்னையில் உள்ள தேவாரப்ப பாடல் பெற்ற கோயில்கள், தென்புலத்தார் சாபம் போக்கும் பூவாளூர், நவக்கிரக பரிகாரத் தலங்கள் முதலானவை திருக்கோயில்களின் பெருமைகளை விளக்கும் கட்டுரைகள்.
முதன்மை நாயகன்ந; இயற்கை நாயகன்; பேரணி நாயகன் என்று பல கோணத்தில் விநாயகப் பெருமான் பெருமைகளை "எழுச்சி நாயகன் விநாயகன்" கட்டைர படம் பிடித்துக் காட்டுகிறது. "யாவரும் போற்றும் சூரிய பகவான்" கட்டுரை சூரிய வழிபாடு பற்றி அற்புதமான செய்திகளை விவரிக்கிறது. ஆசாரம் என்றால் ஒழுக்கம் அதன் பயனாக எட்டு விதமான செல்வங்களும் கிடைக்கின்றன என்று விளக்குகிறார் ஒரு கட்டுரையில். மகான்களின் சேவகன் மகேசன், வாழும் ராகவேந்திரர், வள்ளல் இராமலிங்கர், முத்தமிழுக்கு முடிசூட்டிய வாரியார், ஆகிய கட்டுரைகள் அருளார்கள் வாழ்க்கையை அழகாக எடுத்துக் காட்டுகின்றன.
சிந்தனைக்குரிய அழகான தொகுப்பு இந்நூல்.
- - - 30.06.2007 - - -