சோலையின் எழுத்துக்களின் பின்புலத்தில் இரண்டு திடமான விடயங்கள் தாங்கி நிற்கின்றன. அவரது எளிமையான எழுத்து நடை, மற்றது சார்ந்து நிற்கும் நெடிய அனுபவங்கள். எனவே சொல்ல வரும் எதையும், உள்வாங்கியிருக்கும் அனுபவங்கள் மீது நின்று எல்லோருக்கும் புரிய உரத்துச் சொல்லிவிடுகிறார்.
34 கட்டுரைகளின் தொகுப்பு இந்தப் புத்தகம். பெரும்பாலும் குமுதம் ரிப்போட்டரில் வெளிவந்தவை. மொத்தத்தையும் படித்து முடிக்கையில் சோலையின் கூற்றுக்களின் அடிநாதம் பளிச்சென்று விளங்கும். "ஏகாதிபத்திய எதிர்ப்பு", "ஏகாதிபத்தியத்திற்கு வரவேற்புக் கம்பளம் விரிக்கும் இந்திய அரசின் மீதான கண்டனக் குரல்" இவைதாம் இந்தக் கட்டுரைகளின் சாராம்சம்.
உலகமயமாக்கல், தாரளமயம் என்ற பெயரில் எவன் எவனோ வந்து கொள்ளயடித்துக் கொண்டிருப்பதா என்று கேட்கும் சோலை அதற்கான அடுக்கடுக்கான ஆதாரங்களை அடுக்குகிறார்.
அமெரிக்காவில் மன்சான்ட்டோ, கோக், பெப்சி, வால்ட்மார்ட், தென்கொரியாவின் போஸ்கோ என்ற ஏகாதிபத்தியக் கொள்ளைகளைப் பட்டியலிடும் கட்டுரைகள், மன்மோகன்சிங்கின் தாராளப் புன்னகையை வன்மையாகக் கண்டிக்கின்றன. அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்திற்கு இந்திய அரசு காட்டுகின்ற அவசரத்தையும், அது குறித்த ரகசியப் பரிவர்த்தனையையும் கேள்வி கேட்கின்றன.
அமெரிக்க ஆதரவாளர்கள் இவற்றிற்கெல்லாம் விடையாக கை நீட்டும் சீனாவை தராசில் நிறுத்தி வேறுபாட்டை உடைத்துக் காட்டுகிறார். சிறப்புப் பொருளாதார மண்டலமாகட்டும், அந்நிய முதலீடுகளாகட்டும் அவற்றை சீனா எவ்வாறு அணுகுகிறது என்பதை எளிமையாக விவரிக்கிறார்.
நேரு காலம் தொட்டு நம் நாடு ஏகாதிபத்திய சக்திகளை எவ்வளவு எச்சரிக்கையோடு கையாண்டு வந்திருக்கிறது என்பதற்கும் நிறைய உதாரணத் தகவல்கள். "நேருவும் இந்திரா காந்தியும் மக்கள் நலனிற்கு எதிராக ஒருபோதும் அந்நிய சக்திகளை அனுமதித்ததில்லை" என்கிறார் சோலை.
அமைச்சர்களைத் தூக்கிப் பந்தாடுவதுவரை அமெரிக்காவின் கரங்கள் இந்திய அரசாங்கத்திற்க்குள் எவ்வளவு தூரம் நீளுகின்றன போன்ற சம்பவங்கள் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றன.
"காங்கிரஸ் கதையை மன்மோகன்சிங் முடித்துவிடுவார்" என்று சோலை சொல்லும்போது, அதில் அடங்கியுள்ள ஆற்றாமை வெளிப்படுகின்றது.
ரிலையன்ஸ் போன்ற தேசிய பூர்ஷ்வாக்களின் கொள்ளை இலாப நோக்கங்களையும் கட்டுரைகள் விவரிக்காமல் இல்லை.
மொத்தத்தில் "எங்களுக்கு உப்பு புளி விற்கத் தெரியாதா? " என்று "வேதாளத்திற்கு விருந்து வைக்கும் மத்திய அரசிடம்" கேட்கிறார் சோலை. இடதுசாரிகளின் தேசநலன் சார்ந்த குரல் பதிவுகளுடன் முக்கியமான கால கட்டத்தில் தேசத்தின் போக்கை பதிவு செய்யும் அவசியமான புத்தகம் இது.
- - - மே-ஜூன் 2007 - - -