எங்கும் நிறைநாத பிரம்மம். பூமிக்கு இறங்கி வந்து நாதத்தை மானுடரின் செவிகளில் பொழிந்தது. சென்ற ஆண்டு மீண்டும் அந்த நாத வெளியில் ஒன்றி எங்கும் நிறைந்ததாகி விட்டது. இது இன்னிசை மீரா, எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை. அது ஒரு நாதோபாஸனை. அதைப் படம் பிடிக்கிறது. வாமனின் இந்த நூல். எளிய, இனிய, சிக்கல் இல்லாத நடையில் ஆதாரங்களின் அடித்தளத்தில் எழுதப்பட்ட நூல்.
குல வழித்தடத்தில் இருந்து தப்பி, தேசபக்திப் பாரம்பரியம் வாய்ந்த பெருமகனிடம் தஞ்சம் அடைந்து தருமபத்தினியாகப் பரிணமித்த வரலாறு விவரிக்கப்படுகிறது. உன்னத இசைக் கலையால் ஈட்டிய பொருளை எல்லாம் சமுதாயப் பணிகளுக்கே அர்ப்பணித்த உயர்ந்த தம்பதிகளைச் சித்திரிக்கிறது. சேவாசதனம் சகுந்தலை, சாவித்ரி, மீரா (தமிழ் இந்தி) முதலிய படங்களில் நடித்து பிறகு நடிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்த நிகழ்ச்சிகளைப் பற்றிப் பேசுகிறது. கல்கி, ராஜாஜி, டி.கே.சி. போன்று சான்றோர்களுடன் இந்த தம்பதிகளின் நெருங்கிய தொடர்புகளைக் குறிப்பிடுகிறது.
அவரது வாழ்க்கையின் மறுபகுதி நாதாபாஸனை மூலம் உன்னதமடைந்து அவரது ஆத்மீக வாழ்வு, ஒரு கலைஞரின் வெற்றிக்கு அடிப்படை கலைத்திறன், கடின உழைப்பு, வாய்ப்புகள் இவையே. புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளை, செம்பை, செம்மங்குடி போன்றோரின் முத்திரைகளும், மக்களின் ரசனை உள்ளங்களும் அவரது இசையை வளர்த்தன. உலக இசை மேதை யஷூதி மெனுஹின், மகாத்மாகாந்தி, நேரு, சரோஜினி நாயுடு, பரமாச்சாரியார் போன்றோரையும் அவரது இசை கவர்ந்தது. எடின்பார்க் இசை விழா ஐ.நா. சபை கச்சேரிகள் இவைகள் சான்றோரின் ஆசிகளால் அமைந்தவை. ஒரு வெற்றி அடுத்த வெற்றிக்குக் கொண்டு செல்ல சென்னை சங்கீத வித்வத் சபை 1968ல் இவருக்கு 'சங்கீத கலாநிதி' விருது அளித்தது. அதைப் பெற்ற முதல் பெண்மணி இவர். 'மகசேசே' விருதும் 'பாரத ரத்னா'வும் இவரைத் தேடி வந்தன. இது போன்ற விவரங்களை இந்த நூல் சுவையாகத் தருகிறது. 'சோ' தனது அணிந்துரையில் குறிப்பிட்டிருப்பது போல், 'இந்த நூல் ஒரு வரலாறோ, சங்கீத விமர்சனமோ, புகழுரையோ, மதிப்பீடோ அல்ல. எம்.எஸ். - சதாசிவம் தம்பதியாரைப் பற்றி வாமனின் அனுபவங்கள், ஆண்டாளையும், மீராவையும் போல் பக்தி மார்க்கத்தில் நாதத்தின் கைப் பிடித்து யாத்திரை செய்த நாரீமணியின் ஆத்ம அனுபவங்களின் மலர்ச்சி இந்த நூல்.
- - - - 01-01-2006 - - - -