தமிழ் இதழியல் மோசமில்லை
மக்களின் உண்மையான பிரச்சனைகள் வெளிப்படவும் தமிழ் இதழ்களில் வாய்பிருக்கிறது என்பதைக் காட்டும் கட்டுரைகள்.
பரபரப்பு செய்திகளுக்கே பொதுவாக தமிழ்ப் பத்திரிகைகள் முக்கியத்துவம் அளிக்கின்றன. அரசியல் விமர்சனக் கட்டுரைகளுக்கான இடம் வெகு குறைவு. அப்படிப்பட்ட சூழலில் தணல் பதிப்பகம் இரு செய்திக் கட்டுரைத் தொகுப்புகளை வெளியிட்டு நம்மை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. இந்தத் தொகுப்புகள், தமிழ் இதழியல் அப்படி ஒன்றும் மிகவும் மோசமாக இல்லை: மக்களின் உண்மைப் பிரச்சனைகள் வெளிப்படவும் அங்கே வாய்ப்பிருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுகின்றன.
செய்திகளுக்கு அப்பால்... மூத்த பத்திரிகையாளர் சோலையினுடைய கட்டுரைகளின் தொகுப்பு. நீண்டகாலம் எம்.ஜி.ஆருடன் இருந்தவர் அவர். தொடர்ந்து அ.இ.அ.தி.மு.கவின் அதிகாரபூர்வ நாளேட்டில் எழுதி வந்தவர். சில வருடங்களாக ஓரளவு நடுநிலையாக எழுதிக்கொண்டிருக்கிறார். நல்ல தமிழ் நடை, சமூக அக்கறையும் இருக்கிறது.
ஆனால், திராவிடப் பாரம்பரிய ரீதியான புரிதல் சில கட்டுரைகளில் வெளிப்படுகிறது. காஞ்சி சங்கராச்சாரியார் கைது படலத்தின்போது,
"ஈரோட்டுக் கிழவன் விதைத்த விதைகள் இப்போதுதான் பூத்து, காய்த்து கனி தரத் துவங்கியிருக்கின்றன" என்ற சோலையின் வெற்றிக் களிப்பு
இந்த ரகம்தான். அந்தக் கனி என்னாயிற்று என்பது குறித்து பிறகு ஏன் அவர் கட்டுரை எழுதவில்லை? அதேபோல ஏதோ உல்பா போரே
முடிவுக்கு வந்துவிட்டது போல அஸ்ஸாமின் இந்திரா கோஸ்வாமிக்கு புகழாரம் சூட்டியிருப்பது, இந்தோனேசியாவின் சுகர்னோவை மாபெரும் புரட்சி வீரனாகக் காட்டியிருப்பது, சீனா நமது நண்பன் என விலாவாரியாக எழுதிக்கொண்டு, நேரு செய்த தவறுகள் குறித்து மௌனம் சாதிப்பது, ஜெயலலிதா மீது விமர்சனங்களைத் தவிர்ப்பது இவையெல்லாம், பல மாநில மொழி பத்திரிகையாளர்களின் புரிதல்களில் காணப்படும் குறைகளுக்கு எடுத்துக் காட்டுக்களே. சோலையும் இதற்கெல்லாம் விதிவில்கல்ல.
இத்தொகுப்புகளில் ஒரு பொதுவான குறைபாடு. எந்தக் கட்டுரை எப்பொழுது பிரசுரமானது என்பது குறித்த தகவலே இல்லை. அப்படிப்பட்ட
விவரங்கள் பலருக்கும் பயனுள்ளதாக இருந்திருக்கும்.
- - - மே 2, 2007 - - -