கே.எஸ்சிவகுமாரன் இலங்கையின் முன்னணி திறனாய்வாளர்களுள் ஒருவர்.தமிழிலும் ஆங்கிலத்திலும் இருபது புத்தகங்கள் எழுதியுள்ளார்.இவற்றுள் பெரும்பாலானவை இலக்கியத் திறனாய்வு பற்றியதும் இலக்கிய மதிப்பீடுகள் பற்றியவையாகும்.
"நம்மில் பலர் திறனாய்வுப் போக்குடைய சகல எழுத்துக்களையும் திறனாய்வென்றோ விமர்சனமென்றோ கவனக்குறைவாகக் கணித்து விடுகின்றனர் இது தப்பு நெல்லுக்கும் பதருக்கும் இடையே உள்ள வித்தியாசம் தெரியாத சூழலில் "திறனாய்வு" என்ற புனித அர்த்தம் பொதிந்த வார்த்தையை கொச்சைப் படுத்தாமல் "பத்தி" எழுத்து என்று கூறிக் கொள்வதில் நான் சங்கடப்படவில்லை, அங்கு நேர்மை உண்டு என நினைக்கிறேன்" என்று கூறும் எஸ்.கே.சிவகுமாரன் அவ்வப்போது பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் எழுதிய எழுத்துக்களின் தொகுப்பு இது.திறனாய்வுக் குறிப்புகள், ஊடகத்துறை பற்றிய குறிப்புகள், திரைப்பட இரசனைக்குறிப்புகள், அமரிக்க நினைவுகள், சஞ்சிகை அறிமுகங்கள், தனது அனுபவக் குறிப்புகள், கவிதை நூல்கள், சிறுகதை நூல்கள், விமர்சன நூல்கள், இலக்கிய நூல்கள், அறிஞர்கள், எழுத்தாளர்கள் பற்றியெல்லாம் இந்நூலில் பதிவு செய்துள்ளார் சிவகுமாரன். இவற்றை வாசிக்கும் போது ஆசிரியரின் பரந்த அறிவையும், தேடலையும், பலதையும் வாசிக்கும் பண்பையும் காணக்கூடியதாக இருக்கிறது. 288 பக்கங்களில் 58 தலைப்புக்களில் காணப்படும் விடயங்கள் இலக்கிய மாணவர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் பயனுடையவை. ஈழத்து கலை இலக்கியம் தொடர்பான ஓர் அடிப்படையை அறிந்து கொள்வதற்கு வேண்டிய பல விடயங்கள் இந்நூலில் அடங்கியுள்ளன. ஆசிரியரின் சரளமான நடை நூலினை சலிப்பின்றி வாசிப்பதற்கு உதவுகின்றது.
இந்நூலில் நிருபமா மேனன் ராவின் "ரெயின் ரைசிங் கவிதை நூல், வீடு:ஆய்வறிவாளரிடம் ஒரு குறியீடு" ஆகிய தலைப்புக்களில் அமைந்த இரண்டு பத்தியெழுத்துக்கள் மட்டுமே இந்திய இலக்கியம் தொடர்பானவை. நூலை வாசித்து முடித்ததும் ஆசிரியர் ஏன் இந்த நூலுக்கு இந்தத் "தலைப்பு" இட்டார் என்ற எண்ணம் மனதில் எழுவது தவிர்க்க முடியாததாகிறது.
- - - ஜூன் 2006 - - -