"ஆராய்ச்சி வன்மையும், காவியப் பயிற்சியும், அருட்கவி வளமும், பல்கலைத் திறமும், தாய்மொழிப் பற்றும், உலகியல் அறிவும் ஒருங்கே அமையப் பெற்றவர்" என்று தமிழாசிரியர் ஐயன்பெருமாள் கோனார் அவர்களால், தன் பதினேழாவது வயதில் பாராட்டப்பட்டவர் அரு.ராமநாதன். இவர் சிவகங்கை மாவட்டம் கண்டனூரில் பிறந்தவர். 1924ஆம் ஆண்டு ஜூலை 7ம் திகதி பிறந்த இவர், திருச்சி தேசிய உயர்நிலைப் பள்ளியில் 1934 முதல் 1940 வரை பள்ளிப் படிப்பையும், பின்னர் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் கல்லூரிப் படிப்பும் மேற்கொண்டார். 1944 இல் டி.கே.எஸ் நாடகக் குழுவினர் அறிவித்த புதிய நாடகங்களுக்கான பரிசுப் போட்டியில் இவரது முதலாவது நாடகமான "இராஜராஜ சோழன்" தேர்ந்தெடுக்கப்பட்டது.இந்நாடகம், தமிழ் இயல் இசை நாடக மன்றத்தின் சிறந்த நாடகாசிரியருக்கான முதல் "கலைமாமணி" விருதினை 1967 ஆம் வருடம் அன்றைய முதல்வர் அறிஞர் அண்ணாதுரை அவர்களிடமிருந்து பெற்றுத் தந்தது. மாறுபட்ட ரசனையுடைய வாசகர்களுக்கு ஏற்ற வகையில் பல்சுவை நூல்கள் வெளியிட வேண்டும். எழுத்துச் சுவையில் தான் பெற்ற உவகையை தமிழர்கள் பலரும் அறிந்திட வேண்டும் என்ற நோக்கில் 1952 இல் "பிரேமா பிரசுரம்" என்ற பதிப்பகத்தை துவக்கினார். தன் எண்ணங்களிலும், எழுத்துக்களிலும் அறிவை விடவும் காதலுக்கே அவர் மிக அதிகமான முக்கியத்துவம் அளித்திருக்கின்றார். இதை அவர் தனது ஒப்பற்ற படைப்பான "வீரபாண்டியன் மனைவி" யில் வீரசேகரன், ஜனநாதன் எனும் பாத்திரங்கள் வாயிலாக நியாயப்படுத்துகிறார். "காதல்" என்ற சொல் தமிழ் மக்களால் விரும்பப்படாத ஒரு சொல்லாக இருந்த 1947 காலப்பகுதியில் "காதல்" எனும் பெயரில் பத்திரிகை ஒன்றை ஆரம்பித்தார். அந்த அளவிற்கு அவரிடம் தைரியம் இருந்தது. திருச்சியல் இருந்து வெளிவந்த இப்பத்திரிகை பின்னர் சென்னைக்கு மாற்றலாகியது. "இரசிகன்" என்றும் ஒரு பத்திரிகை நடத்தினார்.