'காவேரி' என்ற புனைப் பெயரில் எழுதிக்கொண்டு வரும் லக்ஷ்மி கண்ணன், ஆங்கிலத்திலும் தமிழிலும் ஒரே நேரத்தில் எழுதி வருகிற எழுத்தாளர். சிறுகதை, நாவல், கவிதை, விமர்சனம், திறனாய்வு, மொழிபெயர்ப்பு எனப் பல்வேறு பரிமாணங்களைக் கொண்ட இவரது இலக்கிய வானம் மிக விரிந்து செல்கின்றது. இவரது உரைநடையின் இயல்பான வீச்சில்கூட ஒரு கவிதை ஈயம் தொனிப்பதை ஸ்பரிசிக்க முடிகிறது. தாய்மொழி தமிழும், கன்னடத்து மண்வாசமும், தில்லியில் பல்வேறு தேச கலாச்சார பாதிப்புகளும், இவற்றிற்கு ஈடுகொடுத்து நின்று, சக மானுட ஜீவிகளுக்காகவும், தனக்காகவும் ஒரு ஆத்ம தேடலை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். இவரது 'ஆத்துக்குப் போகணும்' ஆத்ம பரிசோதனையின் உன்னத உயரத்திற்கு அழைத்துச் செல்லும் படைப்பு. இதுவரை பதினெட்டு நூல்களைப் படைத்திருக்கிறார். இதில் சில படைப்புகள் இந்தி, மராத்தி, வங்காளம் மற்றும் ஆங்கிலத்துடன் பிரஞ்சு, ஸ்பேனிஸ், ஜெர்மன், அரபிக் போன்ற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. சமீபத்தில் பெங்குவின் பதிப்பகம், யாத்ராவுடன் இவரது தமிழ்க் கவிதைத் தொகுதியை இந்தியில் பிரசுரித்தார்கள்.