தர்மபுரி மாவட்டம், அரூர் வட்டத்திலுள்ள சிக்கனூர் என்ற சிற்றூரில் பிறந்தவர். திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில் தமிழிலக்கியத்தில் பி.ஏ பட்டமும், சென்னை புதுக் கல்லூரியில் எம்.ஏ பட்டமும் பெற்றவர். சென்னை பல்கலைக் கழகத்திற்காக "தமிழ்ச்சமூகத்தில் மாற்று அரங்கு " என்னும் பொருளில் சமூக மாற்றத்திற்கான நாடகங்கள் பற்றி ஆய்வு செய்து எம்.ஃபில் பட்டம் பெற்றுள்ளார். சிற்றிதழ்களில் கவிதை, கட்டுரை, சிறுகதை எழுதிவரும் இவர், நாடகச் செயற்பாடுகளில் தன்னை இணைத்துக்கொண்டு பல நாடகக் குழுக்களில் நடித்துள்ளார். எழுத்தாளர் ஞானியின் "பரீக்ஷா", மற்றும் "துடி" பாரதி பிரபுவின் கனல் கலைக் குழு ஆகிய நாடகக் குழுக்களில் நடித்து வருகிறார். கிராமத்து மாணவர்கள் சென்னைக் கல்லூரிகளில் தங்கிப் படித்துவரும் அரசு விடுதிகளின் அவல நிலையை ஆவணப் படமாக இயக்கியுள்ளார். "விடுதீ" - ஆவணப்படம் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளது. சென்னைக் கிறித்தவக் கல்லூரியில் பி.எச்டி பட்டத்துக்காக ஆய்வுப் படிப்பை மேற்கொண்டுள்ளார்.