அதியாமான் ஆண்ட தகடூர் மண்ணில் தண்ணூன்றி நடத்த இடமெல்லாம் தமிழ் வளர்த்த ஔவை மூதாட்டியின் நெடிய மரபில் தோன்றிய தறுகண் தமிழ் மறவர். தருமபுரி - உகுநீர்க்கல் (ஒகேனக்கல்) சாலையில் உள்ள பெண்ணாகரத்தில் 1936.07.01 இல் பிறந்தார். சேலம் அரசினர் கல்லூரியில் பணியாற்றினார். மொழிஞாயிறு பாவாணருடன் அகரமுதலித் திட்டத்தில் பணியாற்றி ஆராய்ச்சித்திறன் பெற்றார். பாவாணருக்குப் பின்னர் அகரமுதலித் திட்டத்தின் இயக்குநராகித் திறமுடன் பல மண்டலங்களை உருவாக்கினார். சிந்துவெளி நாகரிகம் தமிழர் நாகரிகம் என நிலைநாட்டினார். தொன்மை வரலாறு, கல்வெட்டு, இலக்கணம், இலக்கியம், தமிழர் பண்பாடு, மொழிபெயர்ப்பு ஆகிய பல்வேறு துறைகளில் இவர் எழுதிய நாற்பதுக்கு மேற்பட்ட நூல்கள் எழுத்தெண்ணிப் படிக்கத் தூண்டும் புதிய ஆய்வுக் கருத்துக்களின் கருவூலமாகும். இவர் முயற்சி தமிழ் வரலாற்றுக்கு புத்துணர்ச்சி.