சிங்கப்பூர் சித்தார்த்தன் என்று சிங்கை இலக்கிய உலகில் அறியப்படும் பா.கேசவன் அவர்கள் சிங்கப்பூரில் ஆங்கில உயர்நிலைப்பள்ளி, தொடக்கக் கல்லூரி, உமறுப்புலவர் தமிழ் மொழி நிலையம், தேசிய கல்விக் கழகம், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி முதலானவற்றில் தமிழாசிரியராகப் பணியாற்றியவர். சிங்கப்பூர் கல்வி அமைச்சில் பாடநூல் எழுத்தராகவும், கல்வி மேம்பாட்டு அதிகாரியாகவும் பொறுப்பு வகித்த சித்தார்த்தன் அவர்கள் சிங்கப்பூர் பாடத்திட்ட மேம்பாட்டுக்கழகத்தில் அறநெறிக் கல்வித் திட்டக் குழு, கல்வித் தொழில்நுட்பப் பிரிவு ஆகியவற்றிலும் பணியாற்றினார். தமிழ்மொழி, இலக்கியப் பாடத்திட்டக் குழுவின் செயலாளராகவும், தமிழ்க் கல்வி தொடர்பான மற்றும் பல குழுக்களில் உறுப்பினராகவும் இருந்து பணியாற்றியவர். சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம், தமிழர் பேரவை ஆகியவற்றின் தலைவராகவும், தமிழ் மொழி பண்பாட்டுக் கழக செயலாளராகவும் பணியாற்றியவர். இளமை தொட்டே பல்வேறு இதழ்களில் கட்டுரைகள் எழுதிவரும் சித்தார்த்தன் சிறந்த நாடக ஆசிரியருமாவார். சிங்கை வானொலியில் ஒலிபரப்பான இவரது எளிய இலக்கணம் நேயர்களின் ஒருமித்த பாரட்டைப் பெற்றது. சிங்கப்பூர் கல்வி அமைச்சின் தொடக்க நிலைத் தமிழ்ப் பாடநூல்களுக்கு சிங்கப்பூர் நேஷனல் பிரிண்டேர்ஸ் சார்பில் மொழித்துறைப் பதிப்பாளராகவும் இருக்கிறார். இவர் எழுதிய இலகு தமிழில் இனிக்கும் தமிழ் இலக்கணம் என்ற நூல் தமிழக அரசின் சிறந்த நூலிற்குரிய பரிசை 2005 இல் பெற்றுள்ளது.