ஆன்மீகப் பத்திரிகை வாசகர்கள் பலருக்கும் பரிச்சயமான பெயர்! தெரிந்ததை தெளிந்து சொல்லக்கூடிய தேடலும், எழுத்து வடிவமும் இவரது சொத்து. எந்த இடத்திற்குச் சென்றாலும், எந்த விடயத்தை பார்த்தாலும் அதன் வேர்பிடித்துப் பார்க்கும் தன்மையும், ஆராயும் நோக்கும் இவரது தனித்தன்மை. 01.09.1927 இல் பிறந்த சர்மா, சுதந்திப் போராட்டத்திலும் பங்கு கொண்டுள்ளார். பள்ளியில் படிக்கும்போதே சக மாணவர்களோடு சேர்ந்து, மதுக்கடைகளுக்கு தீ வைத்திருக்கிறார், அதற்காக அன்றைய பிரிட்டிஷ் அரசாங்கம் கசையடி கொடுத்துக் கௌரவித்தது! இது படிக்கும் காலத்திலேயே வாங்கிய விருது! பளிச்சென பற்றிக்கொள்ளும் பள்ளிப் பருவத்தில், விடுதலை வேட்கை தீவிரப்பட்டது. கவிதைகள் வெளிப்பட்டன. "பாரத தேவி" இல் வெளி வந்தன. சுதந்திரம் கிடைத்தபின் "அகில இந்திய மாணவர் காங்கிரஸி"ன் சென்னைக் கிளையில் தீவிர பங்கு பெற்ற சர்மா கல்வியில் தீவிரமானார். மின் பொறியிலாளராக, மத்தியப் பிரதேசந்நில் பணியில் அமர்ந்தார். தேடல் நிறைந்த மனம், ஓய்வை விரும்பாது. பணியில் இருந்தபடியே மாநிலமெங்கும் வலம் வந்தார். தான் பாரத்த இடங்கள், தலங்கள், என்று ஒவ்வொன்றையும் கட்டுரைகளாக்கினார். "அரவரசன்" என்ற பெயரில் இவர் எழுதிய கட்டுரைகள் ஆனந்த விகடன், கல்கி, கலைமகள் போன்ற புகழ் பெற்ற பத்திரிகைகளில் இடம் பெற்றன. காஞ்சி மகா பெரியவரின் அருளால், ஸ்ரீ ஆதி சங்கரரின் குருவான கோவிந்த பகவத் பாதர் இருந்த குகையினை இவர் கண்டறிந்தார். சுமார் ஏழரை ஆண்டுகள் இதற்கான அலைச்சல் நீண்டது. இந்தக் குகையில்தான் ஸ்ரீ ஆதி சங்கரர் துறவறம் பெற்றார் என்பது குறிப்பிடத் தக்கது. 1998 இல் இந்தக் குகைக்கு தரிசிக்க வந்த அன்றைய ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன் பெரிதும் வியந்து போனார். ஜனாதிபதி மாளிகைக்கு இவரை அழைத்துப் பாராட்டினர்.