ந.சி.கந்தையா யாழ்ப்பாணத்திற்கு அருகில் உள்ள நவாலி என்னும் ஊரில் 1893 ஆம் ஆண்டு நன்னியர் சின்னத்தம்பி அவர்களின் புதல்வராகப் பிறந்தார். அவ்வூரிலேயே கல்வி கற்றுத் தேறி, சில காலம் ஆசிரியப்பணி செய்தார். ஆசிரியப் பணியிலிருக்கும்போதே ஈழத்தில் பெரும் புலவர்களின் அறிமுகத்தில் தமிழ் இலக்கண, இலக்கியங்களை கற்றுத் தேர்ந்தார். பின்னர் சில காலம் மலேயாவில், பிருத்தானியா தொடர்வண்டி சேவையில் சில காலம் பணியாற்றினார். தாம் எழுதிய நூல்களை பதிப்பித்து வெளியிடுவதற்காகத் தமிழ் நாட்டிற்கு சென்று, அங்கு வீரபாகுப் பிள்ளை என்பவரால் நடத்தப்பட்டுக் கொண்டிருந்த ஒற்றுமை நிலையம் மூலமாகத் தனது நூல்கள் சிலவற்றை வெளியிட்டார். பின்னர் முத்தமிழ் நிலையம், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் ஆகிய பதிப்பகங்களும் ந.சி.கந்தையா அவர்களுடைய நூல்களை வெளியிட்டன. தமிழியம் பற்றிய ஆய்வை மேற்கொண்ட பல அறிஞர்களுள் ந.சி.கந்தையா அவர்களின் பணி முதன்மையானது. பொது அறிவுத் துறையிலும், அகராதித் துறையிலும் தனித்துவமான இடத்தை பெற்றார். செந்தமிழ் அகராதி, தமிழ் இலக்கிய அகராதி, தமிழ்ப் புலவர் அகராதி, காலக்குறிப்பு அகராதி, திருக்குறள் அகராதி போன்ற அகராதிகள் இவரால் தோற்றம் பெற்றன. ஐம்பதிற்கும் மேற்பட்ட நூல்களை இவர் எழுதியுள்ளார்.