மலையகத்தில் பணிபுரிந்த டாக்டர் சுந்தரம் பிள்ளைக்கும் மனைவி சின்னம்மாளுக்கும் இரண்டாவது மகனாகப் பிறந்தவர் சிசு நாகேந்திரன். தற்பொழுது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமாக மாறியுள்ள பரமேஸ்வராக் கல்லூரியின் லண்டன் மற்றிக்குலேஷன் வகுப்பு வரை படித்தார். பின்னர் யாழ் மத்தியக் கல்லூரியில் கணக்கியல், சுருக்கியல், வர்த்தகம் முதலிய துறைகளிலும் கற்றுத் தேறினார். 1944 ஜனவரியில் அரச சேவையிலே சேர்ந்து, மன்னார் அரசாங்க அதிபராய் கடமையாற்றிய சீ. சிற்றம்பலத்தின் ஸ்டெனோகிராபஃராகப் பணியாற்றினார். பின்னர் படிப்படியாக உயர்ந்து கணக்காளராகவும் கணக்காய்வாளராகவும் பல்வேறு திணைக்களங்களிலே பணியாற்றி, 1979இல் இளைப்பாறினார். இவர் நல்ல புகைப்படக் கலைஞர். நாடக நடிகர். இசைச் சுவைஞர், நாடக அரங்கக் கல்லூரி தயாரித்த பல நாடகங்களிலும் முக்கிய பாத்திரங்களிலேயே நடித்தார். லண்டனிலிருந்து 1994 ஆம் ஆண்டில் அவுஸ்திரேலியாவுக்குக் குடி பெயர்ந்து வாழ்கின்றார். பிரியாவிடையின் போது கலைவளன் என்கிற பட்டத்தைத் தமிழபிமானிகள் அளித்தனர். இந்த வயதிலும் துடிப்புள்ள இளைஞராக எழுதிக் கொண்டிருக்கின்றார். இவருடைய வாழ்க்கை அனுபவக் குறிப்புகளைக் கொண்ட இந்நூல், இலங்கையின் சமூக வரலாற்றினைப் பதிவு செய்யும் ஆவணங்களுள் மிகவும் முக்கியமானது.