இயற்பெயர் மார்கபந்து. புனைப் பெயர் வழித்துணைவன் (29-10-1955) வடாற்காடு. வேலூரில் 4-11-1934 இல் பிறந்தவர். குமுதம் வார இதழ் நடத்திய இவரே என் தலைவர் என்ற கட்டுரைப் போட்டியில் வில்வநாதன் என்ற பெயரில் பேரறிஞர் அண்ணா பற்றி எழுதி முதல் பரிசு பெற்றவர்.(20-8-1955) மேடையில் அரங்கேறிய நாடகங்கள், ''அருணோதயம்'', ''வாழு! வாழ விடு'', ''காதல் பாதை'', ''இம்மைப் பிறப்பில்'' ''திருவள்ளுவர்'' ஆகியவை. பாரதிதாசனின் ''குயில்'' ஏட்டிலும், கண்ணதாசனின் ''தென்றல்'' ஏட்டிலும் கவிதைகள் எழுதியுள்ளார். சிலப்பதிகாரம் கூறும் கடல் கோளை அடிப்படையாக வைத்து இவர் எழுதிய ''தென் குமரித் தெய்வம்'' வரலாற்று நாவலை பாரதி நிலையம் (12-74) வெளியிட்டிருக்கிறது. இவர் ஆய்வு செய்து எழுதிய ''திருவள்ளுவர்'' (தமிழ், ஆங்கிலம்) ''அவ்வையார்'' (தமிழ்), ''பெரியார் ஈ.வெ.ரா'' (தமிழ்,ஆங்கிலம்) ''இராசராச சோழன்'' (தமிழ்), ''ஈழத்தை ஆண்ட எல்லாளன்'' (தமிழ், ஆங்கிலம்), ''தமிழ்க் கடவுள் முருகன்'' (தமிழ்) Sivan God of Tamil (English) என்னும் ஓவியக்கதைப் புத்தகங்களைச் சிங்கப்பூர் இவிஎஸ் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. இவர் ''திருவள்ளுவர்''வரலாற்று நாடகப் புத்தகம், பெங்களுர், சென்னை, மதுரை அண்ணாமலைப் பல்கலைக்கழகங்களில் பி.ஏ., பி.எஸ்.சி பட்டப் படிப்பிற்குப் பாட நூலாக வைக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் GEC Civil படிப்பிற்குப் பாட நூலாகப் பத்து ஆண்டுகள் தொடர்ந்து வைக்கப் பெற்றது. சிங்கப்பூர் வானொலியில் முழு நாடகமும் பல முறை ஒலிபரப்பப் பெற்றது. இது ஒரு மணி நேர நாடகமாகச் சென்னை வானொலியில் ஐந்து முறை ஒலிபரப்பப்பட்டது. இரண்டு மணி நேர மேடை நாடகமாகவும் அரங்கேற்றப்பட்டுள்ளது. மேலும் இந்தப் புத்தகத்தை அடிப்படையாக வைத்து இவர் எழுதிய "திருவள்ளுவர்'' தொலைக்காட்சித் தொடர், சோழா கிரியேஷன்ஸ் என்னும் நிறுவனத்தாரால் தயாரிக்கப்பட்டுச் சென்னைத் தொலைக்காட்சியில் 21 பகுதிகளாக ஒலிபரப்பப்பட்டது. கோலாம்பூர். ''ஆஸ்ட்ரோ'' வானவில் தொலைக்காட்சியிலும் மறு ஒலிபரப்பு செய்யப்பட்டது. ஆசிரியர் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம் அந்தமான் கப்பலில் நடத்திய கவியரங்கத்திலும் கவி பாடியிருக்கிறார். ''திருவள்ளுவர்'' தொலைக்காட்சித் தொடர், திருக்குறள் ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் இவர் கவிதைகள் சில வரலாற்று நாவல்கள் ஆகியவற்றைப் புத்தகங்களாக வெளியிடும் முயற்சியில் இப்பொழுது ஈடுபட்டிருக்கிறார்.