மதுரையில் பிறந்து இந்தியாவெங்கிலும் கோயம்புத்தூரிலிருந்து ஷில்லாங் வரை சுற்றிப் படித்துள்ளேன். அப்பாவின் வேலை அப்படி. திருச்சியில் சீதாலக்ஷ்மி ராமசாமி கல்லூரியில் 1985ல் BSc Physics பட்டம் பெற்றேன். இரண்டாம் மொழியாகப்படித்த தமிழை ஏழாம் வகுப்பிலேயே விட்டுவிட்டு வடமாநிலங்களில் ஹிந்தி படித்து, பிறகு மதிப்பெண்ணிற்காக கல்லூரியில் சம்ஸ்கிருதம் படித்தேன். தமிழே படித்திருக்கலாம் என்று பலமுறை எண்ணிக் கொள்கிறேன் இப்போதெல்லாம். 1990 களின் ஆரம்பத்தில் சிங்கப்பூர் வந்தபுதிதில் கையில் கிடைத்ததையெல்லாம் வாசிக்க ஆரம்பித்தேன். வகைவகையான எழுத்துக்கள் பரிச்சயமானது. ஆனால், சின்னக்குழந்தையின் திணறல் இருந்தது. எல்லாமே பிடித்தமாதிரியும், எல்லாவற்றையும் படித்துவிடவேண்டும் என்ற தீவிர ஆர்வமும் இருந்தது. ஏழாண்டுகளுக்கு முன்பு ஆரம்பித்தது எழுதும் முயற்சி. சிங்கையின் நூலகங்கள் வாசிப்புப்பசிக்கு நல்ல தீனி. தமிழ் முரசு, முன்பிருந்த சிங்கை எக்ஸ்பிரஸ், இப்போதுள்ள சிங்கைச் சுடர் போன்றவை எழுத்துச் சோதனைகளுக்கு நல்ல தளங்கள். திண்ணை, திசைகள் தவிர சாமாசார், இ-சங்கமம், தமிழோவியம், தட்ஸ் தமிழ், பதிவுகள் போன்ற மின்னிதழ்களிலும் கதைகள் /கட்டுரைகள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. உள்ளூர் அச்சிதழ்களில் தொடங்கி, இணையத்தில் தொடர்ந்து, ஜூன் 2004 முதல் தமிழகத்தின் பிரபல அச்சிதழ்களில் எழுதவாரம்பித்துள்ளேன். சிங்கப்பூரின் ஒரே தமிழ்நாளிதழான தமிழ் முரசின் முன்னாள் ஆசிரியர் திரு. வை. திருநாவுக்கரசு அவர்கள் தொலைபேசியில் ஒரு முறை அழைத்து ஊக்கப்படுத்தியுள்ளார். அதுமட்டுமில்லாது சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகமும் பல வாய்ப்புக்களை நல்கியுள்ளதைச் சொல்லியே ஆக வேண்டும். 'முத்தமிழ் விழா'வில் பல போட்டிகளில் பங்கு பெற்றுப் பல பரிசுகளும் பெற்றிருந்தாலும், 2001ல் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் நடத்திய சிறுகதைப்போட்டியில் என் சிறுகதை 'நொண்டி' இரண்டாம் பரிசு (S$ 750) பெற்றது குறிப்பிடத்தக்கது. இதே கதை 'நுடம்' என்று பெயர் ஆசிரியர் பிச்சினிக்காடு இளங்கோவினால் மாற்றப்பட்டு 'சிங்கைச்சுடர்' மற்றும் மின் சஞ்சிகையான 'திண்ணை' போன்றவற்றில் பிரசுரம் கண்டது. இது மட்டுமல்லாது இக்கதையிலிருந்து சில பகுதிகள் அதே வருடம் சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் நடந்த தமிழ் மாநாட்டில் திரு.மாலன் அவர்களால் படிக்கப்பட்டு சிலாகிக்கப்பட்டது. சிங்கப்பூரின் நூலகங்கள், தமிழ் முரசு, உள்ளூர் இதழ்களான சிங்கை எக்ஸ்பிரஸ் மற்றும் சிங்கைச்சுடர், சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம், சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கம், தேசிய கலைகள் மன்றம் போன்ற அமைப்புக்கள், களங்கள் மற்றும் போட்டிகள் அமைத்துக் கொடுத்து எனது தொடக்கத்திற்கும் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருந்ததை மறந்துவிடமுடியாது.