Dr.சிவம் - வாழ்க்கையின் பெறுமானங்கள், வழிமுறைகள் பற்றி, சொந்த இல்லத்திலும், கந்தர்மடம் சிவகுருநாத குருபீடம், மகாதேவ ஆச்சிரமத்திலும், இலங்கை - யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியிலும் உருவாக்கப்பட்டார்.
விலங்கியல் விஞ்ஞானத்திற் பட்டம்பெற்று, ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, முதுமானிப் பட்டம் பெற்றார். பேராதனைப் பல்கலைக்கழக இந்து மாணவர் சங்கத்தின் தலைவராகப் பணியாற்றி - மாணவர்களின் நம்பிக்கையான, ஆக்கபூர்வமான, ஒருங்கமைந்த சக்திக்குச் சான்று பகரும் விதத்தில் நெடிந்துயர்ந்துவிளங்கும் குறிஞ்சிக்குமரன் ஆலய நிர்மாண வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டவர்.
14 ஆண்டுகாலம் வெளியிடப்பட்ட "ஊற்று" என்ற தமிழ் விஞ்ஞான சஞ்சிகையை ஆரம்ப்பித்தவர்களுள் முக்கிய இடத்தை வகித்தவர். சமூக விஞ்ஞான மேம்பாட்டை இலக்காகக் கொண்டு ஒரு தாசாப்த காலத்திற்குமேல் முழு நேரத் தொண்டராகச் சேவையாற்றியவர்.
நாட் சுதந்திரமடைவதற்கு முன்னர் - 200 பாடசாலைகள், ஒரு ஆசிரியப் பயிற்சிக் கலாசாலை என்பன உருவாக்கப்படுவதற்கு மூலகாரணமாக இருந்த "சைவ வித்தியா விருத்திச் சங்கம்" ( Hindu Board of Education ) என்ற அரச சார்பற்ற ஸ்தாபனம் புனரமைக்கப்பட்டு, செயலற்ற நிலையிலிருந்து சுறுசுறுப்புடன் கடமையாற்றும் நிலைக்குக் கொண்டு வருவதற்கும் பொறுப்பாக இருந்தவர்.
பலதரப்பட்டதுறைகளில் வெளியிடப்பட்ட நூல்களை வாசிப்பதில் ஆர்வம் காட்டும் Dr சிவம் பிரயாணம் செய்வதிலும், கவிதை யாப்பதிலும் மிகுந்த ஈடுபாடு உடையவர். உண்மையை அறிவதே இவரது இலட்சியமாகும்.