பேராசிரியர் முனைவர் சுப்பிரமணியம் வித்தியானந்தன் இருபதாம் நூற்றாண்டின் ஈழத்துத் தமிழியல் ஆய்வில் ஒரு நிறுவனம். இவரது பணிகள் பன்முகப் பரிமாணம் கொண்டவை. குறிப்பாகப் பல்கலைக்கழகத்தைச் சமூகத்துடன் இணைத்துப் பலவேறு புத்தாக்கக் கட்டங்கள் உருவாகக் காரணமாக இருந்தவர்.
வித்தியானந்தன் வழிவந்த சால்புகளும் சிந்தனைகளும் சமகாலத் தமிழ்பேசும் மக்களின் சமூக அரசியல் பண்பாடு உட்கிடக்கைகளின் உயிர்ப்புத்தளமாகவும் அமைந்திருந்தன. அவை பன்மைத்துப் பண்பாட்டின் அடையாளங்களை அடையாளப்படுத்தியும் அவை சார்ந்த கருத்தியல் தளத்தையும் உருவாக்கி நின்றன.
தமிழ் உணர்வின் தமிழ்ப் பிரக்ஞையின் உருத்திரட்சிக் கருத்துநிலையின் - தமிழ்த் தேசியத்தின் - பரப்பாளராவும் அதன்வழி பல்வேறு புதிய ஆய்வுக் களங்கள் சிறக்கவும் பெருகவும் வழிகாட்டினார்.