வணிகம் சார்ந்து இயங்கும் தமிழ்த்திரைச் சூழலில், உலகளாவிய நல்ல திரைப்படங்களை அடையாளம் காட்டுவதற்கும், அதன் திரைமொழி சார்ந்த நுட்பத்தையும், கவித்துவத்தையும் சிலாகிப்பதற்கும், ஆய்வு செய்வதற்கும், விமர்சிப்பதற்கும் யார் இருக்கிறார்கள் ? சிறந்த திரைப்படங்கள் குறித்த ஆழ்ந்த தேடலும், உலகின் சிறந்த திரைப்பட இயக்குநர்களின் படைப்புக்கள் குறித்த நுண்ணறிவும் கைவரப் பெற்ற தமிழ் எழுத்தாளர்கள் இருக்கிறார்களா ? மிகச் சில பெயர்களையே முன் மொழிய முடியும் எனில், அதில் விஸ்வாமித்திரன் எனும் பெயர் முக்கியமானது. 'செவ்வகம்' எனும் திரைப்பட இதழின் ஆசிரியர். 'கியூப சினிமா' ம்றும் 'சிறுவர் சினிமா' எனும் நூல்களைத் தந்தவர். மாற்றுத் திரைப்படங்கள் குறித்து தொடர்ந்து எழுதி வருபவர். உலகத் தரத்தில் தமிழ்த் திரைப்படத்தை உருவாக்கும் கனவும் அதற்கான தகுதியும் உடையவர். படமாக உருமாறவேண்டிய நல்ல திரைக்கதைகளை எழுதியிருப்பவர். தமிழ்த் திரைப்படச் சூழலில் புதிய அலையை எழுப்பும் தருணத்திற்காக காத்திரமான தனது மொழியின் வழியே மௌனமாகத் தொடர்ந்து இயங்குபவர். திரைப்படம் குறித்து எழுதுவதில் தமிழின் மிக முக்கியமான ஆளுமைகளில் ஒருவர். - செழியன்