சு.குமணராசன்(1957), திருநெல்வேலி மாவட்டம், மூலைக்கரைப்பட்டி என்னும் சிற்றூரில் பிறந்து, 1973 ஆம் ஆண்டு முதல் மும்பையில் வசித்து வருபவர். தந்தை பெரியாரின் தத்துவங்களால் ஈர்க்கப்பட்டு, வாழ்க்கையை அவற்றின் வடிவமாகவே அமைத்துக் கொண்டவர். கடற்பொறியியல், பொருளாதாரம், அரசியல் மற்றும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு என பல துறைகளில் கல்வி கற்று இந்திய பாதுகாப்புத் துறை கப்பல் தளம், கடலோரப் பாதுகாப்புப் படையின் பொறியியல் பிரிவு மற்றும் தனியார் கப்பல் நிறுவனங்கள் என பல நிறுவனங்களில் பணியாற்றி பழுத்த அனுபவம் பெற்றவர். இவரது தகுதி மற்றும் திறமையினைக் கருத்தில்கொண்டு இந்திய அரசு, 2004ஆம் ஆண்டு மும்பை துறைமுகப் பொறுப்புக் கழக உறுப்பினராக நியமனம் செய்தது. எண்ணை மற்றும் எரிவாயுத் துறையில் தென் மத்திய ஆசிய நாடுகள் குழுமத்தின் பாதுகாப்புத் துறையில் உறுப்பினராகவும் பல ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். உலகின் முப்பதுக்கும் அதிகமான நாடுகளில் பயணம் செய்துள்ளார். மும்பையில் இலக்கியம், சமூகம், மற்றும் அரசியல் சார்ந்த மேடைகளில் காணப்படும் சிறந்த சொற்பொழிவாளர். மும்பையிலிருந்து வெளிவரும் தமிழ் ஏடுகளில் தமிழ், தமிழர் இன உணர்வைப் போற்றும் வகையில் கட்டுரைகளும் எழுதி வருபவர். இவரது சொல்லும் செயலும் தமிழர் சோர்வைப் போக்குபவை.