கரூர்மாவட்டம் வாங்கலாம் பாளையம் என்ற சிற்றூரில் பிறந்தவர். இந்தியா, ஜெர்மனி, அமெரிக்காவில் கல்வி பயின்றவர். நீர்வளத்துறையில் டாக்டர் பட்டம் பெற்றவர். நீர்வளத்துறைப் பேராசிரியர்; தமிழகத் தொழில்நுட்பக் கல்வி இயக்குநர்; மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம், அண்ணாபல்கலைக் கழகம், இந்திரா காந்தி திறந்த நிலைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் துணைவேந்தர் போன்ற பதவிகளை வகித்தவர். நீர்வளத்துறையில் இவரது பங்களிப்பு Kulandaiswamy Model என்ற பெயரில் அத்துறை இலக்கியத்தில் இடம்பெற்றுள்ளது. உலக அளவில் நீர்வளத்துறை அறிஞர்களால் மதிக்கப்படுபவர். பல்கலைக் கழக மானியக் குழு (U.G.C), அனைத்திந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் ( AICTU), அனைத்திந்தியத் தொழில் பயிற்சிக் கல்விக் குழு, தமிழகத் திட்டக் குழுமம் போன்ற பல நிறுவனங்களில் உறுப்பினராக இருந்தவர். சர்வ தேசியத் தொகைநிலைக் கல்விக் கழகத்தில் (AICTE) ஆசியாவின் துணைத் தலைவராகவும், காமன் வெல்த் நாடுகளின் பல்கலைக் கழகக் குழுவின் (Assocition of Commonwealth Universites - London) தலைவராகவும், இந்தியப் பல்கலைக் கழகங்கள் குழுவின் (Association Of Indian Universities) தலைவராகவும், இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் ( ISTE) தலைவராகவும் பணியாற்றியவர். ஆர்வம் காட்டும் மற்றத் துறைகள் ; தமிழ் வளர்ச்சி, தமிழ் இலக்கியம், தமிழ் எழுத்துச் சீரமைப்பு. 'பொன்னி' இதழ் 1948 இல் பாரதிதாசன் பரம்பரையில் அறிமுகப்படுத்தியது. 'குலோத்துங்கன்' என்ற புனைப் பெயரில் இழருடைய கவிதைகள் ஏழு தொகுதிகளாக வெளிவந்துள்ளன. இவருடைய உரை நடை நூல்கள் பல பல்கலைக்கழகங்களில் பாட நூல்களாக இடம்பெற்றன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 1980 இல் கௌரவ D.Litt பட்டம் கொடுத்துச் சிறப்பித்தது. கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ள மற்ற பல்கலைக் கழகங்கள ; அழகப்பா பல்கலைக்கழகம் - D.Sc - (1997), பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் - D.Litt - (1997) ஜவரகர்லால் நேரு தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் - Ph.D - (1999) இந்திராகாந்தி தேசியத் திறந்த நிலைப் பல்கலைக்கழகம் - D.Litt (2000) கர்நாடகா திறந்த நிலைப் பல்கலைக்கழகம் - D.Litt (2002) Dr B.R அம்பேத்கார் திறந்த நிலைப் பல்கலைக்கழகம் - D.Litt (2002) பெற்றுள்ள விருதுகள் சில; 'வாழும் வள்ளுவம்' என்ற நூலுக்கு சாகித்ய அகாதமி விருது 1988, இந்திரா காந்தி தேசிய ஒருமைப்பாடு விருது 1988, கல்விக்காக U.G.C விருது 1990, மைய வேளாண்மை வாரியத்தில் வைரவிழாச் சிறப்பு விருது 1991, தமிழக அரசின் திருவள்ளுவர் விருது 1999, இந்தியப் பொறியியலாளர் நிறுவனம், இந்தியாவின் சிறந்த பொறியியல் வல்லுநர்களில் ஒருவராக அறிவித்தது 1991, வான்கூவர் (Canada) காமன்வெல்த் கல்வி நிறுவனம் (COL) அதன் கௌரவ உறுப்பினராக ஆக்கிப் பெருமைப் படுத்தியது 1999. I.I.T கரக்பூர் நிறுவனத்தின் பேரவை(Senate), 2003 இல் அதுவரை அந்த நிறுவனத்திலிருந்து பட்டம் பெற்ற ஏறத்தாள 35000 முன்னாள் மாணவர்களில் Distinguished Alumnus என்ற கௌரவத்திற்கு இருவரைத் தேர்ந்தெடுத்தது. அதில் இவரும் ஒருவர். குடியரசுத் தலைவர், கல்வி - அறிவியல் துறையில் இவர் செய்த சேவைகளுக்காக 1992 இல் 'பத்ம ஸ்ரீ' விருதும், அறிவியல் - தொழில்நுட்பத்துறையில் இவர் செய்த சேவை, படைத்த சாதனைகளுக்காக 2002 இல் 'பத்ம பூஷண்' விருதும் கொடுத்துக் கௌரவித்தார். மைய அரசு மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சருக்கும், தமிழ்மொழி மேம்பாட்டு வாரியத்தின் (Tamil Language Promotion Board) தலைவர், தமிழ் வளர்ச்சிக் கழகத் தலைவர் டாக்டர் உ.வே.சா நூலகக் குழுவின் தலைவர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் ( IITS) துணைத்தலைவர், தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் நிறுவனத்தலைவர் போன்ற பல பொறுப்புகளை வகித்து வருகிறார்.