ஈரோடு அவல் பூந்துறை அருகில் உள்ள வடக்கு வெள்ளியம்பாளையம் ஊரைப் பிறப்பிடமாகக் (22.10.1937) கொண்டவர். தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றவர். ஈரோடு சிக்கைய நாயக்கர் கல்லூரி, பூண்டி புட்பம் கல்லூரி, கோபி அறிவியல் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் பல்வேறு நிலைகளில் பணியாற்றியுள்ளார். பல்கலைக் கழகங்களிலும் பல்வேறு பொறுப்புக்களை வகித்துள்ளார். ஆய்வு நெறியாளர். பல்வேறு சமூக இயக்க அமைப்புக்களில் பொறுப்புக்களை வகிக்கும் முனைவர் கா.அரங்கசாமி அவர்கள் கிராமங்கள் தோறும் சென்று திருக்குறள் வாழ்வியல் சிந்தனைகளை வளர்க்கும் பணியையும், சிவஞான போதம், திருமந்திரம், திருமுறை, திருக்குறள் விரிவுரைகளை தொடர்ச்சியாக செய்து வருகின்றார். இந்திய நகரங்கள் பலவற்றிலும், ஐரோப்பாவில் சில இடங்களிலும் இவர் சொற்பொழிவுகள் செய்துள்ளார். "கொங்கு" இதழின் ஆசிரியராக எட்டு ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். இவரது கட்டுரைகள் பல இதழ்களில் தொடர்ந்து வெளிவருகின்றன. இவரது தேடலில் பல நூறு கல்வெட்டுக்கள் கண்டறியப்பட்டன. நூற்றுக்கும் மேற்பட்ட ஓலைச்சுவடிகள் தேடித் தொகுக்கப்பட்டுள்ளன. சில ஆய்வுக்குப்பின் நூலாக்கம் பெற்றுள்ளன. இவரது அறிவரசு பதிப்பகம் மூலம் புத்தகங்கள் வெளியிடப்ட்டுள்ளன. அவற்றுள் இரு நாடக நூல்கள் தமிழக அரசின் சிறந்த நூலுக்கான பரிசினைப் பெற்றுள்ளன. இவர் தொடர்ந்தும் கொங்கு நாட்டுப்புறப் பாடல்கள் தொகுப்பிலும் ஆய்விலும், பழங்குடிகள் பற்றிய ஆய்விலும், ஓலைச்சுவடிகள் பற்றிய ஆய்விலும், மறைந்த நகரங்கள் பற்றிய ஆய்விலும் ஈடுபட்டு வருகின்றார்.