சிந்தாமணி நிகண்டு
சிந்தாமணி நிகண்டு மின்–அகராதி

சொற்களை விளக்கும் தொல்காப்பியச் சொல் அதிகாரத்தின் உரியியல், தமிழில் அகராதி / நிகண்டு முயற்சிகளின் முன்னோடி என்று கொள்ளப்படுகிறது. ஒன்பதாவது நூற்றாண்டில் திவாகரரால் செய்யப்பட்ட திவாகர நிகண்டு தொடக்கம், 1984 இல் வெளியான நீரரர் நிகண்டு வரையில் பல நிகண்டுகள் செய்யுள் வடிவில் வெளிவந்துள்ளன. ஈழத்தவர்களால் செய்யப்பட்ட, காலத்தால் முந்திய நிகண்டாக வல்வை ச. வயித்தியலிங்கரவர்களால் இயற்றப்பட்ட சிந்தாமணி நிகண்டு அமைகிறது. சிந்தாமணி நிகண்டு மூலமும் உரையும் என்ற தலைப்புடன், 1876 இல் சென்னை இலக்ஷ்மீவிலாஸ அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு செய்யுளும் நான்கு அடிகளையுடையதாகவும், ஒவ்வொரு அடியிலும் இரண்டு சொற்ளுக்குப் பொருள் கூறும் நிலையிலும், 386 செய்யுட்களூடாக 3088 சொற்களுக்குப் பொருள் கூறப்பட்டுள்ளதாக, 2013 இல் வெளியான சிந்தாமணி நிகண்டு மூலமும் உரையும் அகராதியும் நூலின் பதிப்பாசிரியர்களில் ஒருவரான பேராசிரியர் வ.ஜெயதேவன் அவர்கள் பதிப்புரையில் குறிப்பிட்டுள்ளார்கள்.

மனனம் செய்வதை முதன்மைப்படுத்தியதாக இருந்த அன்றைய கல்வி முறைக்கு ஏதுவான நிலையிலேயே நிகண்டுச் செய்யுட்கள் அமைந்துள்ளன. குருகுல மாணவர்கள், கவி பாட முனைவோர், புராண படனம் செய்வோர், வில்லுப் பாட்டுக் கலைஞர்கள் என்று பலரும் நிகண்டுகளை மனனம் செய்வதன் மூலமே தங்களுடைய சொல் வளத்தினைப் பெருக்கியுள்ளார்கள் என்பதாக ஆய்வாளர்களின் கூற்று உள்ளது.

ஐரோப்பியரின் வருகையினால் கிடைக்கப்பெற்ற கல்விமுறை மாற்றங்கள், செய்யுள் வடிவில் அமைந்த நிகண்டுகளின் தேவையை இல்லாதொழித்தன. மேற்குலக அகராதிகளைப் போல, அகரவரிசையில் தலைச் சொற்களை ஒழுங்குபடுத்திப் பொருள்கூறும் அகராதிகள் தமிழில் தோற்றம் பெற்றன.

அச்சில் உருவாக்கப்பட்டிருந்த அகராதிகள், இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் காலத்தில் தோற்றம் பெற்ற தகவல் தொழில்நுட்பத்தின் மூலம் மின்–அகராதிகளாக மாற்றம் கண்டன. மொழிதொடர்பில் பெருந்தொகை வளங்களுடன் ஆய்வுகளைச் செய்துவரும் ஆங்கிலம், பிரஞ்சு போன்ற மேற்குலக மொழிகளில் வெளியான அகராதிகள் மின்–அகராதிகளாக முதலில் மாற்றங்கண்டன. தமிழில், சென்னைப் பல்கலைக் கழக வெளியீடான தமிழ்ச் சொற்களஞ்சியம் ( Tamil lexicon ) தென்கிழக்காசிய எண்ணிம நூலகத் / அகராதித் திட்டத்தில் அமெரிக்க சிகாகோ பல்கலைக்கழகத்தினால் மின்–அகராதியாக்கப்பட்டு இணையத்தில் இலவசமாகக் கிடைக்கிறது. கிரியாவின் தற்காலத் தமிழ் அகராதியும் மின்–அகராதியாக இணையத்தில் உள்ளது.

உண்மையில் அகராதிகள், கலைக்களஞ்சியங்கள், நூற்றொகைகள் போன்ற கருவி / நோக்கு நூல்கள் எண்ணிம நிலையில் கொடுக்கப்படும்போது, உயரிய உச்ச பாவனை நிலையைப் பெறமுடியும். அச்சில் கிடைக்காத கூடுதல் பயன்பாட்டுக் கூறுகளான குறைவான நேரத்தில் தேடுதல், ஒப்பிடுதல் வசதிகள் போன்ற பல எண்ணிமப் பதிப்பில் கிடைக்கின்றன.

விருபா வளர் தமிழ் செயலி உருவாக்க முயற்சியினூடாகப் பெற்ற பத்தாண்டு அனுபவத்தோடு, இன்றைய ஏற்றம் பெற்ற தகவல் தொழில்நுட்பத் துணையுடன் புதிய தமிழ்த் தரவுதளங்களை அமைக்கும் முயற்சியின் ஒரு கூறாக எமது வைத்தியலிங்கப் புலவரின் சிந்தாமணி நிகண்டினை மின்–அகராதியாக மாற்றியுள்ளோம்.

சிந்தாமணி நிகண்டு பற்றிய சில அவதானங்களை இங்கு தருகிறோம்.

1 அடியில் X 2 சொற்கள் X 4 அடிகள் X 386 செய்யுட்கள் = 3088 சொற்கள் அவற்றுக்கு 3088 பொருள் கூறல் என்பது பொதுவான ஒரு கணக்கு, ஆனால் துல்லியமானதல்ல.

எடுத்துக் காட்டாக பின்வரும் 266 வது செய்யுளை எடுத்து நோக்குவோம்.

செய்யுள் : 266

சூரலே வேத்திரப் பேர் சூர்ப்பமே சுளகின் நாமம்
பாரியை களத்திரம்தான் பரிமா என்பது துரங்கம்
மீரமே அம்புராசி மிருகமதம் கத்தூரி
சோரமே பட்டிமைக்கு ஆம் துரகதம் குதிரை ஆமே.

உரை : 266
சூரல்-பிரம்பு; சூர்ப்பம்-சுளகு. பாரியை-மனைவி; பரிமா-குதிரை. மீரம்-கடல்; மிருகமதம்-கத்தூரி. சோரம்-களவு; துரகதம்-குதிரை.

* இங்கு செய்யுளின் முதலாவது அடியில் சூரல் என்ற தலைச் சொல்லிற்கு நிகரான பொருள் விளக்கச் சொல் வேத்திரம், ஆனால் உரையில் இதே சூரல் என்ற தலைச் சொல்லிற்கு நிகராகன பொருள் விளக்கச் சொல் என்பதாக பிரம்பு தரப்படுகிறது.
* இவ்வாறே இரண்டாவது அடியில் பாரியை என்ற தலைச் சொல்லிற்கு நிகராக களத்திரம் மற்றும் மனைவி ஆகிய இரண்டு பொருள் விளக்கச் சொற்கள்.
* தொடர்ந்து, இரண்டாவது அடியில் பரிமா என்ற தலைச் சொல்லிற்கு துரங்கம் மற்றும் குதிரை ஆகிய இரண்டு பொருள் விளக்கச் சொற்கள்.
* இதே போன்று மூன்றாவது அடியில் மீரம் என்ற தலைச் சொல்லிற்கு நிகராக அம்புராசி மற்றும் கடல் ஆகிய இரண்டு பொருள் விளக்கச் சொற்கள்.
* இவ்வாறே நான்காவது அடியில் சோரம் என்ற தலைச் சொல்லிற்கு நிகராக பட்டிமை மற்றும் களவு ஆகிய இரண்டு பொருள் விளக்கச் சொற்கள்.

ஆக 266 வது செய்யுள் மற்றும் உரை மூலம்

1. சூரல் = 2. வேத்திரம், 3. பிரம்பு,
4. சூர்ப்பம் = 5. சுளகு,
6. பாரியை = 7. களத்திரம், 8. மனைவி,
9. பரிமா = 10. துரங்கம், 11. குதிரை, 12. துரகதம்,
13. மீரம் = 14. அம்புராசி, 15. கடல்,
16. மிருகமதம் = 17. கத்தூரி,
18. சோரம் = 19. பட்டிமை, 20. களவு

ஆகிய 20 சொற்களைத் தெரிந்துகொள்ளமுடியும். இது குறித்த 266 வது சொய்யுளிற்கான நிலை. இதுவே பிறிதொரு செய்யுளிற்கு கூடலாம் அல்லது குறையலாம். எனவே தனித்தனியே ஒவ்வொரு செய்யுளிற்குமாக நூணுகிப் பார்த்தல் அவசியாமாகும்.

இந்த வகையில் சிந்தாமணி நிகண்டில் உள்ள ஒரு செய்யுளின் மூலம் இடது பக்கம் உள்ள தலைச்சொற்களாக 8 சொற்களையும், வலது பக்கத்தில் செய்யுளில் 8, உரையில் 8 என்று பொருள்விளக்கச் சொற்களாக அதிகபட்சம் 16 சொற்களையும், மொத்தமாக 24 சொற்களை அறிந்துகொள்வதற்கு வாய்ப்பு உள்ளது. சிந்தாமணி நிகண்டின் 14வது செய்யுளில் இவ்வாறு 24 சொற்களை அறியும் தன்மை அமைந்துள்ளது. சிந்தாமணி நிகண்டு மின்–அகராதியில் ஒவ்வொரு செய்யுளிலும் எத்தனை சொற்கள் கூறப்பட்டுள்ளன என்பது காட்டப்படுகிறது.

அழகு - 10 - சொற்கள் வண்டு - 10 - சொற்கள் மலை - 11 - சொற்கள் தாமரை - 11 - சொற்கள் கள் - 11 - சொற்கள் உமை - 11 - சொற்கள் கடவுள் - 12 - சொற்கள் கருடன் - 13 - சொற்கள் பாண்டியன் - 13 - சொற்கள் கந்தன் - 14 - சொற்கள் பிரமன் - 15 - சொற்கள் பாம்பு - 16 - சொற்கள் குபேரன் - 16 - சொற்கள் காற்று - 16 - சொற்கள் கடல் - 17 - சொற்கள் ஈசன் - 18 - சொற்கள் பூமி - 18 - சொற்கள் சந்திரன் - 21 - சொற்கள் மன்மதன் - 21 - சொற்கள் யானை - 22 - சொற்கள் பொன் - 23 - சொற்கள் சூரியன் - 27 - சொற்கள் இந்திரன் - 28 - சொற்கள் விட்டுணு - 36 - சொற்கள் பகைவர் - 40 - சொற்கள் சிவன் - 57 - சொற்கள்

இவ்வாறாக அனைத்துச் செய்யுட்களூடாக 3086 தலைச் சொற்களையும், 2953 பொருள் விளக்கச் சொற்களையும், ஒட்டுமொத்தமாக 5422 சொற்களை சிந்தாமணி நிகண்டின் மூலம் அறிந்து கொள்ளமுடிகிறது.

ஞிமிறு ( 11 : 3 : 3 / 198 : 4 : 1 ),

மனோசன் ( 368 : 3 : 3 / 381 : 2 : 3 )

ஆகிய இரண்டு சொற்கள் இரண்டு முறை தலைச் சொலாகத் தரப்பட்டுள்ளது.

261 சொற்கள் தலைச்சொல்லாகவும், பொருள் விளக்கச் சொல்லாகவும் இடம் பெறுகின்றன.

சிவன் என்ற சொல் அதிகபட்சமாக 57 தடவைகள் பொருள் விளக்கச் சொல்லாகவே காணப்படுகிறது. இவ்வாறு 10 தடவைகளுக்கு மேல் காணப்படும் சொற்கள் எவையென்பதும், எத்தனை தடவைகள் வருகின்றன என்பதும் அருகில் உள்ள வரிவிளக்கப் படத்தில் காட்டப்பட்டுள்ளது.

இறை பெயர்களுக்கு நிகரான அளவில் பகைவர் என்ற சொல்லிற்கு அதிக பொருள் விளக்கச் சொற்கள் காணப்படுதல் வியத்தகு செய்தியாகும், ஆய்விற்கு உட்படுத்தவேண்டிய விடயமாகலாம்.

2013 இல் வௌியான சிந்தாமணி நிகண்டு மூலமும் உரையும் அகராதியும் நூலில் தலைச்சொற்களே அகராதியாக வரிசைப்படுத்தித் தரப்பட்டுள்ளது. சிந்தாமணி நிகண்டு மின் அகராதியில் தலைச்சொற்கள், பொருள் விளக்கச் சொற்கள் இரண்டும் ஒருங்கிணைக்கப்பட்ட நிலையில் வரிசைப்படுத்தித் தரப்பட்டுள்ளது.

ஆய்வாளர்களுக்கு உதவிடும் நிலையில் 1876 இல் வௌியான சிந்தாமணி நிகண்டின் பக்கங்கள் மின்வருடப்பட்ட நிலையில் இணைக்கப்பட்டுள்ளன. அவ்வாறே சொல் எந்த இடத்தில் வந்துள்ளது என்பதையும் தந்துள்ளோம். எடுத்துக்காட்டாக ஞிமிறு ( 11 : 3 : 3 ) என்பது, பதினோராவது செய்யுளில், மூன்றாவது அடியில், மூன்றாவது சொல்லாக உள்ளது என்பதைக் குறிக்கும்.

சிந்தாமணி நிகண்டு மின்–அகராதியாக்கப் பணியின் தொடர்ச்சியாக அச்சில் வௌியான வேறு சில கருவி / நோக்கு நூல்களையும் எண்ணிமமாக்கும் வேலைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. கிடைக்கப்பெறும் ஆளணி வளங்களின் தன்மைக்கேற்ப அவை வௌியிடப்படும்.

மின்–அகராதிச் செயலி உருவாக்கம், தரவு உள்ளிடல், தரவுதள வடிவமைப்பு இன்னபிற வேலைகள் அனைத்தையும் தனியொருவனாகச் செய்துள்ளதால் தவறுகள் காணப்படுமிடத்து அறியத் தந்தால் திருத்திக்கொள்ளப்படும்.

விருபா குமரேசன்

 

எண்ணம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan Mobile : +91 - 9840254333